A strong response to the Chief Minister - Annamalai released a sensational post! google
தமிழ்நாடு

முதல்வருக்கு பதிலடி - அண்ணாமலை வெளியிட்ட அதிரடி பதிவு !

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவினை மேற்கோள்காட்டி, தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Baala Murugan

அண்ணாமலை எக்ஸ் பதிவு

annamalai twitter முதல்வர் ஸ்டாலின் பதிவை மேற்கொள்காட்டி தமிழக மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் @mkstalin அவர்களே Samagra Shiksha திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள்

Delimitation-ல் தென் மாநிலங்களில் எந்த தொகுதியும் குறைக்கப்படாது என்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShahஅவர்கள், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தெரிவித்துவிட்டார். உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்குமா இல்லை?

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் இருக்கும்போது, ஆளுநர் உங்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் இயலாமை உங்களை புலம்ப வைத்திருக்கிறது

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று நீங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் இருக்கிறீர்கள். மத்திய அரசு தற்போது அதனை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. இனிமேலும் அத்திட்டத்தில் உங்கள் கட்சியினரால் ஊழல் செய்ய முடியாது என்ற இயலாமை, உங்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது.

சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை

AIIMS கட்டுமானம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. வேங்கைவயலுக்குதான் நீங்கள் போகவில்லை. மதுரைக்குச் சென்று பார்த்திருக்கலாமே? உங்களை யார் தடுத்தார்கள்? நீங்கள் விரும்பவில்லை என்றாலும், இந்த வருடம் மதுரை AIIMS, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று நீங்கள் கொடுத்த வாக்குறுதி நினைவில் இருக்கா? குறைந்தபட்சம் ஒரு செங்கல்லாவது வைத்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, இயற்கை பேரிடர்களுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துவிட்டது. 5000 கோடி ரூபாய் செலவு செய்தும், வருடந்தோறும் சென்னையை வெள்ளக்காடாக மாற்றுவதே உங்கள் சாதனை.

திமுக கும்பலுக்கு நீட் தேர்வு கசக்கிறது

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வேண்டுமென்றே உங்கள் அரசு தவறான DPR-ஐ வழங்கியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? திருத்தம் செய்யப்பட்ட DPR-ஐ மீண்டும் சமர்ப்பிக்க எண்ணம் இருக்கிறதா இல்லையா? கீழடி ஆய்வறிக்கை, உலகளாவிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், மேலும் அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஆதாரங்களைக் கொடுக்க என்ன தயக்கம் உங்கள் அரசுக்கு? நீட் தேர்வை, தமிழக மக்கள் எதிர்க்கவில்லை.

ஏழை, எளிய மாணவர்களுக்கு, நீட் ஒரு வரப்பிரசாதம் என்பதை, ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் எளிய பின்புலம் கொண்ட பெற்றோர்கள் கூறுவார்கள். மருத்துவக் கல்வி இடங்களை விற்று, இத்தனை ஆண்டு காலம் பல கோடி சம்பாதித்த திமுக கும்பலுக்கு மட்டுமே நீட் தேர்வு கசக்கிறது.ஒரு காலத்தில், தங்களுக்குப் பிடிக்காதவர்கள் குறித்து, பொதுக்கழிவறைகளில் கரித்துண்டால் எழுதி அற்ப சந்தோஷப்படும் மோசமான பழக்கத்தை, AI காலத்திலும் தொடராதீர்கள் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே. இனியாவது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.