Annamalai said complete removal of Tamil questions from Sub-Inspector main examination is highly condemnable. 
தமிழ்நாடு

எஸ்ஐ தேர்வு ’தமிழ் கேள்விகள் நீக்கம்’ : திமுக அரசை சாடிய அண்ணாமலை

சார்பு ஆய்வாளர் (SI) முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.

Kannan

சார்பு ஆய்வாளர் தேர்வு

தமிழக சீருடை பணியாளர் வாரியம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சார்பு ஆய்வாளர் (SI) பணிக்கான முதன்மை தேர்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் தமிழ் தொடர்பான கேள்விகள் ஒன்று கூட இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவர்களின் மொழித்திறன்

இதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டு இருக்கும், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ பொதுவாக, சீருடை வாரியம் நடத்தும் இந்த முதன்மைத் தேர்வு, பகுதி 1 - 80 பொது அறிவு கேள்விகளும், பகுதி 2 - 60 கேள்விகளில், மாணவர்களின் மொழி வாயிலான தகவல் பரிமாற்றத்தைச் சோதனை செய்வதற்காக, 10 கேள்விகள் தமிழிலும், 10 கேள்விகள் ஆங்கிலத்திலும் இருப்பது வழக்கமான நடைமுறை. மீதமுள்ள 40 கேள்விகள், உளவியல் தொடர்பான கேள்விகளாக அமைந்திருக்கும்.

தமிழ் கேள்விகள் நீக்கம்

ஆனால் இந்த ஆண்டு, எந்த முன்னறிவிப்புமின்றி தமிழ் கேள்விகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. 10 ஆங்கிலக் கேள்விகள் மட்டும் இடம் பெற்றிருக்கின்றன. அரசு வெளியிட்ட தேர்வு நடைமுறைகள் மற்றும், மாதிரி வினாத்தாளை மீறி, முன்னறிவிப்பின்றி தேர்வு நாளில் விதிகளை மாற்றுவது, அரசுத் தேர்வுகளின் நம்பகத்தன்மையையே சிதைத்திருக்கிறது.

தமிழ் மொழி பெயரில் நாடகம்

தமிழ் மொழியின் பெயரால் நாடகமாடும் திமுக அரசு, சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழை புறக்கணித்துள்ளது, திமுக அரசின் போலி தமிழ்ப் பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது தமிழ் வழி மாணவர்களுக்கு திமுக செய்துள்ள வெளிப்படையான அநீதி.

கருணை மதிப்பெண் வழங்குக

தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க, இந்தத் தேர்வில் அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை சாடியுள்ளார்.

=============================