தமிழகத்தில் ராகுல் பரப்புரை
தமிழகத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி, நெல்லையில் அவர் பரப்புரையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்கவில்லை.
வருமான வரித்துறை சோதனை?
சென்னையில் உள்ள தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாகவும், ராகுல் கூட்டத்திற்கு செல்லாமல் தன்னை தடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார்.
அண்ணாமலை அறிக்கை
இந்தநிலையில் நடந்தது என்ன? என்பதை விளக்கும் வகையில் அண்ணாமலை அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். “இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய திரு. ராகுல்காந்தி அவர்களின் ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்தார் செல்வப்பெருந்தகை.
செல்வப்பெருந்தகை மீது ராகுல் அதிருப்தி
ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம் அடித்து விட்டது, ராகுல் காந்திக்கு தெரிந்திருக்கிறது போலும்.
எனவே, செல்வப்பெருந்தகையை இனிமேல் எனது கூட்டத்தின் பக்கமே விடாதீர்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
வருமான வரித்துறை சோதனையா?
ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதட்டத்தில், செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார்.
வருமான வரித்துறை மறுப்பு
சோதனை நடந்ததாக திரு. செல்வப்பெருந்தகை கூறியது முழுப் பொய் என்று, வருமான வரித்துறை தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், தன்னை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்ததாக செல்வப்பெருந்தகை கூறினார்.
நாடகம் அம்பலமாகி விட்டது
வெளியே வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதிலிருந்து, அவர் கூறியது பொய் என்பது உறுதியாகியிருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை.
ஸ்டாலினுக்கு தோல்வி பயம்
அவரது நகைச்சுவையை நம்பி, முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் வைத்திருப்பதுதான் உச்சகட்ட நகைச்சுவை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அடிப்படையான விஷயங்களைக் கூட சரிபார்க்காமல் வடக்கு, தெற்கு என்று வசனம் பேசுவது, அவரது தேர்தல் தோல்வி பயத்தைக் காட்டுகிறது.
தமிழக மக்கள் ஏமாளிகளா?
இந்த உதவாக்கரை கூட்டணி, தமிழக மக்களை எத்தனை ஏமாளிகள் என்று எண்ணினால், இப்படி ஒரு பொய்யை துணிந்து சொல்வார்கள்?” என்று அண்ணாமலை சாடியுள்ளார்.
=====