Annamalai strongly criticized Tamil Nadu Govt interim budget 2026, calling it a deceptive report  google
தமிழ்நாடு

”கடன் வாங்கும் அரசாக திமுக!” : 10 லட்சம் கோடி சுமையை நோக்கி தமிழகம் : அண்ணாமலை சரமாரி கேள்வி

Annamalai on TN Budget 2026: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் போதிய வளர்ச்சித் திட்டங்கள் இல்லாத ஒரு ஏமாற்று அறிக்கை என அண்ணாமலை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

Kannan

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்

Annamalai Criticized TN Interim Budget 2026 : சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால், இடைக்கால பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்தது. இதில் 2027ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கடன்சுமை 10 லட்சம் கோடியை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் வினையாற்றி வருகின்றன.

மக்களுக்கு பயனளிக்காத பட்ஜெட்

இந்தநிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ தமிழக அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களுக்கு எந்தவிதமான ஆக்கப்பூர்வமான பயன்களையும் அளிக்கவில்லை என்றார்.

பெரும் கடன் சுமையில் தமிழகம்

மாநிலத்தின் நிதி நிலைமையை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தமிழகத்தின் கடன் சுமை அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரித்தார்.

தற்போது 9 இலட்சம் 29 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் மாநிலக் கடன், அடுத்த நிதியாண்டில் 10 இலட்சம் 62 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் சூழல் நிலவுவதைச் சுட்டிக் காட்டினார்.

வருவாய் ஈட்ட வழி எங்கே?

வருவாய் ஈட்டுவதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்து கடன் சுமையைக் குறைக்க வேண்டிய அரசு, அதற்கு மாறாக ஆண்டுதோறும் கடனை அதிகரித்துக் கொண்டே செல்வதாகக் குற்றம்சாட்டினார்.

கடன் வாங்கும் அரசாக ’திமுக’

இதனால் திமுக அரசு ஒரு "கடன் வாங்கும் அரசாக" மாறிவிட்டதாக அவர் விமர்சித்தார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளிலும் அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதை தரவுகளுடன் அண்ணாமலை விளக்கினார்.

வளர்ச்சி விகிதம் சரிவு

உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைவிட மிகச் சொற்பமாக, அதாவது 11 கோடி ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

47 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் தற்போது 2 சதவீதம் சரிந்துள்ளதாகவும் தெரிவித்தார். 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டதாகக் கூறப்படுவதை "வெறும் ஒப்புக்குச் சொல்லப்படும் அறிவிப்பு" என்று விமர்சித்த அவர், இதில் முறையான திட்டமிடல் இல்லை என்றார்.

மக்களை ஏமாற்றும் வேலை

அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. குறிப்பாக, கைவினைத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்து மக்களை ஏமாற்றும் வேலைகள் நடப்பதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

கோவில்கள் புனரமைப்பு - வெள்ளை அறிக்கை

இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்கள் புனரமைப்புக்காக 8 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அரசு கூறுவது குறித்து, உண்மை நிலையை விளக்க ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

விவசாய வளர்ச்சி பின்னடைவு

தமிழகத்தில் விவசாய வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்த வளர்ச்சிகூட மத்திய அரசின் திட்டங்களால் கிடைத்த பயனே தவிர, மாநில அரசு விவசாயிகளுக்காகத் தனிப்பட்ட முறையில் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்று அண்ணாமலை பேட்டியில் விளக்கமாக பதிலளித்தார்.

==========================