Annamalai urged DMK government to stop abusing its power, respect the court's decision in Thiruparankundram issue case news in tamil Google
தமிழ்நாடு

”அதிகார துஷ்பிரயோகம்” திமுக அரசு நிறுத்தணும் : அண்ணாமலை எச்சரிக்கை

Annamalai on DMK : திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொண்டு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பினை மதித்து நடக்க வேண்டும் என்று, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Kannan

திருப்பரங்குன்றம் தீபத் தூண்

Annamalai Criticized DMK on Thiruparankundram Issue Case in Tamil : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் தான், அங்கு தீபம் ஏற்ற தடை ஏதுமில்லை, தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானதே என்று இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்து இருக்கிறது.

தீர்ப்பு பெருமகிழ்ச்சி அளிக்கிறது

தீர்ப்பினை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “ திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது

திமுக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அது தமிழக திமுக அரசு திட்டமிட்டு உருவாக்கினால் மட்டுமே நடக்கும் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளது.

திமுக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

மேலும், திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோவிலுக்கே சொந்தமானது என்பதை, சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் திமுக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, மிக ஆபத்தானது என்றும், அரசியல் லாபத்திற்காக திமுக அரசு, இத்தனை தூரம் தரம் தாழ்ந்து செல்லக் கூடாது என்றும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திமுக அரசை எச்சரித்துள்ளது.

அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தங்க

திமுக அரசு இனியாவது தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மதித்து, முருக பக்தர்கள் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

=============