Annamalai urged DMK govt to publish a white paper, to spent Rs 78,000 crore building roads and bridges in rural areas https://x.com/annamalai_k
தமிழ்நாடு

சாலை, பாலங்களுக்கு 78,000 கோடி! : வெள்ளை அறிக்கை கோரும் அண்ணாமலை

Annamalai on DMK Government : கிராம பகுதிகளில் சாலைகள், பாலங்கள் அமைக்க 78,000 கோடியை செலவிட்டதாக கூறும் திமுக அரசு, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.

Kannan

கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை

Annamalai on DMK Government : இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் மலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான இங்கு, குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய மலை கிராமங்களுக்கு, நேரடியாகச் செல்ல பாதை இல்லாததால், கர்நாடக, தமிழக வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள கர்கேகண்டி நீரோடை பள்ளம் வழியாக, சுமார் 20 கிலோ மீட்டர் பயணித்தே இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியும்.

முடங்கி கிடக்கும் கிராம மக்கள்

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, கர்கேகண்டி நீரோடை பள்ளத்தில், காட்டாறு வெள்ளமாக ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமலும், அவசர தேவைக்கு கூட கிராமத்திலிருந்து வெளியே செல்ல முடியாமலும் முடங்கிக் கிடக்கின்றனர்.

சாலைகள், பாலங்கள் எங்கே?

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளில், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என, சுமார் ₹78,000 கோடி செலவிட்டுள்ளதாக, நிதிநிலை அறிக்கையில் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை. மத்திய அரசு வழங்கும் கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதியும், எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை.

மக்கள் வரிப்பணம் வீணடிப்பு

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது வெட்கக்கேடு. நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? ஒவ்வொரு மழைக்காலத்திலும், இது போன்ற கிராம மக்கள் அவதிப்படுவது முதலமைச்சருக்கு தெரியாதா?

மேலும் படிக்க : Annamalai: திமுக அரசால் தமிழக மக்களுக்கு கிடைத்தது என்ன?-அண்ணாமலை!

வெள்ளை அறிக்கை தாங்க

சாலைகள் அமைத்தோம் என்று கணக்கு காட்டியிருக்கும் சுமார் ₹78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், போர்க்கால அடிப்படையில், சாலை வசதிகளற்ற மலைக்கிராமங்களுக்கு, உடனடியாகச் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் அமைத்துத் தர வேண்டும் என்று” அந்த அறிக்கையில் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.

=============