கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு?
Annamalai on KN Nehru MAWS Corruption Case : தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் டெண்டர்களை கையாளுவதன் மூலம் நடந்த பெரிய முறைகேடுகளை சுட்டிக்காட்டியுள்ள அமலாக்கத்துறை, இந்த டெண்டர் மூலம் குறைந்தபட்சம் ரூ. 1,020 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
இதில் கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டியுள்ளது.
2வது முறையாக கடிதம்
தி.மு.க. அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான உள்ளாட்சி துறையில் நடந்த ஒரு பெரிய முறைகேட்டைக் குறித்து தமிழ்நாடு அரசுக்கு அமலாக்கத்துறை இரண்டாவது கடிதத்தை எழுதியுள்ளது. கடந்த அக்டோபர் 27 அன்று, உள்ளாட்சித் துறையில் நடந்த பணிக்காகப் பணம் மோசடி குறித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, அமலாக்கத்துறை, காவல்துறை டிஜிபி-க்கு கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடல் அதிகாரிகள் போன்ற பதவிகளைப் பெற ஒரு நபருக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.
உதவியாளர்களும் லஞ்சம் வாங்கியது வாட்ஸ்அப் மூலம் அம்பலம்
உள்ளாட்சித் துறையின் பணிகளைச் செய்யும் ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
டெண்டர் முறைகேடு செய்யப்பட்டு அல்லது முன்பே தீர்மானிக்கப்பட்ட நிலையில், அந்த ஒப்பந்ததாரர்கள் பயனாளிகள் ஆவார்கள் என்றும், ரெய்டின் போது நேருவின் உதவியாளர்களின் தொலைபேசிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அமலாக்கத்துறை சுட்டிக் காட்டியுள்ளது.
கட்சி நிதியாக ஊழல் பணம்?
உள்ளாட்சியில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 'கட்சி நிதி' என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில், கூடுதலாக, துறையில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள்கூட ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் வசூலித்து அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறியுள்ளர்.
பல்வேறு பிரிவுகளில் லஞ்சம்
அமைச்சரின் உதவியாளர்களின் தொலைபேசிகளிலிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் செய்திகள், உரையாடல்கள் அல்லது கணக்கீட்டுத் தாள்களின் அடிப்படையில், ரூ. 1,020 கோடி மொத்த லஞ்சப் பணம் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக அமலாக்கத்துறை பல குறிப்பிட்ட நிகழ்வுகளைக் குறிப்பிட்டு தெரிவித்துள்ளது.
தலைவிரித்தாடும் லஞ்சம்
மேலும், சமூகக் கழிவறைகள், துப்புரவுத் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், துப்புரவாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள், நீர்/ஏரிப் பணிகள் போன்ற கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம்
எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பிரிவு 66(2)-ஐ பயன்படுத்தி தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதுவது இது முதல் முறை அல்ல.
ஆற்றுமணல் கொள்ளை வழக்கில், அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு இடையேயான கூட்டுச் சதியை விசாரிக்க எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி, ஆற்று மணல் சுரங்க முறைகேடு தொடர்பான ஆதாரங்களை இணைத்து, தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது உறுதியாகியுள்ளது.
அண்ணாமலை எக்ஸ் பதிவு
அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் அமைச்சர் திரு. கே. என். நேருவின் கீழ் MAWS துறையில் நடந்த ₹888 கோடி வேலைக்கான பண மோசடியில் தொடங்கிய விஷயம், இப்போது மற்றொரு அதிர்ச்சியூட்டும் ₹1020 கோடி ஊழலாக மாறியுள்ளது, அமலாக்க இயக்குநரகம் 252 பக்க அறிக்கையை டிஜிபியிடம் சமர்ப்பித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும்
MAWS அமைச்சர் தனது உறவினர்கள் மூலம் துறை ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது, இது இந்த மிகப்பெரிய கொள்ளைக்கு சமம்.
வாட்ஸ்அப் அரட்டைகள், லஞ்ச கணக்கீட்டுத் தாள்கள் மற்றும் ஹவாலா மூலம் செய்யப்பட்ட பணமோசடி பற்றிய விவரங்களை அமலாக்க இயக்குநரகம் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்த திமுக அரசாங்கத்தின் கீழ் திறமையாகச் செயல்பட்ட ஒரே துறை "வசூல், கமிஷன் மற்றும் ஊழல் துறை" மட்டுமே என்று தெரிவித்துள்ள அவர், தமிழக முதல்வர் திரு @mkstalinஅவர்கள் இழுத்தடிப்பதை நிறுத்திவிட்டு, வேலைக்கான பண மோசடி மற்றும் ஒப்பந்தங்களுக்கான லஞ்ச ஊழல் குறித்து உடனடியாக FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.