தலைகீழாக மாறிய தமிழக அரசியல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் களம் என்பது தலைகீழாக மாறி நிற்கிறது. ஆட்சி அமைக்க திணறிய தவெகவிற்கு, திமுக கூட்டணி கட்சிகள் கைகொடுத்தன.
அதிமுக எம்எல்ஏக்கள் ட்விஸ்ட்
காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் ஆதரவால் தவெக ஆட்சி அமைக்க விஜய் முதல்வரானார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் அரசுக்கு ஆதரவு தந்து ட்விஸ்ட் கொடுத்தனர்.
அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க எடப்பாடி தரப்பு முயன்றது. அதிருப்தி அணியில் இருந்து சிலர் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு திரும்பினர்.
தவெக பலம் 106
108 இடங்களில் தவெக வெற்றி பெற்ற நிலையில், ஒரு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ய, ஜேசிடி பிரபாகர் சபாநாயகர் ஆகி விட்டார். எனவே, அவையில் தவெக பலம் 106 ஆக உள்ளது.
பெரும்பான்மைக்கு 12 இடங்கள் தேவை
அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவை. அது கிடைக்கும் வரை ஆட்சிக் கவிழ்ப்பு இருக்குமா என்ற அச்சம் தவெகவிற்கு இருக்கும்.
ஆட்சியில் பங்கு, அரசுக்கு ஆதரவு என்ற நிலையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளன. இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தருகின்றன. இதன் மூலம் 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெக அரசுக்கு இருந்தாலும், தங்களின் வலிமையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதே முதல்வர் விஜயின் நிலைப்பாடு.
தவெகவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்
அதற்கு இப்போதுள்ள ஒரே வாய்ப்பு இடைத்தேர்தல் மட்டுமே. அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களான பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் பதவியை ராஜினாமா செஞ்சிட்டு சூட்டோடு சூட்டாக தவெகவில் இணைஞ்சிட்டாங்க.
அவர்கள் வழியில அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் எம்எல்ஏ பதவியை தூக்கி எறிஞ்சிட்டு, தவெக பக்கம் போயிட்டாரு.
காத்திருக்கும் விஜயபாஸ்கர்கள்
இந்தநிலையில, கடந்த வாரம் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் பதவிய ராஜினாமா செஞ்சாரு. ஆனா இன்னும் தவெகவில் அவர் இணையவில்லை.
இதேபோல கரூர் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கரும் அதிமுகவில் இருந்து விலகி விட்டார். அவரும் தவெகவில் இணையவில்லை.
7 தொகுதிகளில் இடைத்தேர்தல்
வரும் 4ம் தேதி இருவரும் தவெகவில் இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே, இப்போதைய நிலையில், 7 தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க இருக்கின்றன.
அதிருப்தில் 8 எம்எல்ஏக்கள்
மேலும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உட்பட வட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர், தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இவர்கள் எப்போது வேண்டுமானாலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாம்.
திமுகவில் அதிருப்தியில் இருக்கும் 4 எம்எல்ஏக்களும் தவெகவுடன் ரகசியப் பேச்சில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
16 தொகுதிகளில் இடைத்தேர்தல்?
இவை உண்மையாக இருந்து எட்டு பேரும் ராஜினாமா செய்தால் சுமார் 16 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது.
வேலுமணி தரப்பும் எடப்பாடி மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதால், அவர்களில் சிலரும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு இருக்கிறது.
இதைநோக்கி தவெக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் தவெக தனித்து வெற்றி பெற்று விட்டால், அறுதிப் பெரும்பான்மை கிடைத்து விடும். 2031 வரை யாருடைய தயவு இன்றி தவெக ஆட்சி செய்யலாம் என்பதை அக்கட்சி நிர்வாகிகளின் நிலைப்பாடாக உள்ளது.
===============.