Anti-Corruption Bureau Conducts Searches at K.N. Nehru-Linked Premises Google
தமிழ்நாடு

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை...!

முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என். நேருவின் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து...

NARENDRAN K

மீண்டும் சோதனையில் இறங்கிய அதிகாரிகள்:

திமுக முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேருவின் வீட்டிலும், சென்னையில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.634 கோடி முறைகேடு புகார் :

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் அரசு வேலைகளுக்கு ஆட்களை நியமித்ததில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.

குறிப்பாக, உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கான நியமனங்களில் சுமார் ரூ.634 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்தக குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே தற்போதைய சோதனை நடைபெறுகிறது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் சோதனை:

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி கே.என். நேருவுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கில் விசாரணை நடத்துவது தொடர்பான உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கே.என். நேரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.

இந்த சூழலில், இன்று மீண்டும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

===============