திமுகவின் எ.வ. வேலு
திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ. வேலு. தற்போது அவர் திமுகவின் கொறடாவாக பொறுப்பு வகித்து வருகிறார்.
13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள எ.வ. வேலுவின் வீடு மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறதாம்.
தவெக ஆட்சியில் முதல் சோதனை
தவெக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, திமுக முன்னாள் அமைச்சர் ஒருவரது வீட்டில் நடைபெறும் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இதுவாகும்.
டெண்டர் முறைகேடு?
திமுக ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், உத்தண்டி-திருவான்மியூர் இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்காக டெண்டர் விடப்பட்டது.
13.3 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டத்துக்கு கிலொ மீட்டருக்கு 158 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் வழங்கப்பட்டிருந்தது.
சந்தை மதிப்பை விட அதிகம்?
ஆனால், சந்தை மதிப்பைவிட ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 11 கோடி ரூபாய் அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
உத்தண்டி-திருவான்மியூர் திட்டம் ரத்து
இதையடுத்து, உத்தண்டி-திருவான்மியூர் உயர்மட்ட மேம்பாலத் திட்டத்துக்கான அந்த டெண்டரை ரத்துசெய்து தவெக அரசு உத்தரவிட்டது.
அதோடு, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் 500 கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்பட்ட டெண்டர்கள், அந்தப் பணியின் தரம் குறித்தெல்லாம் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டதாம்.
அதன் அடிப்படையில் தான் எ.வ.வேலு வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்
முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநரின் அனுமதி அவசியமாக உள்ளது. இதன் காரணமாக திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பூர்வாங்க விசாரணை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனவாம்.
துறை ரீதியாக தீவிர விசாரணை
வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், மாஜிக்கள் மீது வழக்கு பதிய ஆளுநரின் அனுமதி கோரப்படும் என கூறப்படுகிறது. டாஸ்மாக் தொடங்கி மீன்வளம் வரையில், எந்தெந்தத் துறைகளில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன என்ற முழு விவரங்களும் சேகரிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
திமுக மீது தவெக கோபம்
தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி செக் வைக்க திமுக முயன்றதாகவும், எனவே, இனியும் தாமதிக்க கூடாது என்று அதிரடி நடவடிக்கையில் விஜய் அரசு இறங்கி இருப்பதாகவும் தெரிகிறது.
===================