மணல் குவாரிகளில் முறைகேடு
தமிழகத்தில் 2021 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்ட 28 அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
கூடுதல் மணல் அள்ளப்பட்டது?
வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி முறையை பின்பற்றாமல், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ஆற்று மணல் அள்ளப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
முறைகேடு - அரசுக்கு ரூ. .4,730 கோடி
மணல் எடுத்துச் செல்ல வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டு, அவை உண்மையானவைபோல் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள் மூலம் அரசுக்கு சுமார் ரூ.4,730 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தனது விசாரணையில் தெரிவித்திருந்தது.
இதற்காக டிரோன், செயற்கைக்கோள் படங்கள், ஜியோ ஸ்கேனிங் மற்றும் பொக்லைன் இயந்திரங்களின் ஜி.பி.எஸ். தரவுகள் மூலம் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டது.
வழக்கு பதிய அமலாக்கத்துறை கோரிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே தமிழக டிஜிபி-க்கு கடிதம் எழுதி வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியது. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு வழக்குப்பதிவு செய்யவில்லை.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மணல் குவாரிகளில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாக கருதிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் புதிதாக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
துரைமுருகன் உள்பட 28 பேர் மீது வழக்கு
இதில் திமுகவைச் சேர்ந்த, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஓய்வுபெற்ற முதன்மை தலைமை பொறியாளர்கள் ஏ.முத்தையா, ராமமூர்த்தி, நீர்வளத்துறையைச் சேர்ந்த 14 அரசு ஊழியர்கள், 10 தனியார் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டோர் என 28-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
34 இடங்களில் சோதனை
இதன் தொடர்ச்சியாக சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 34 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
திருச்சியில் நீர்வளத்துறை பொறியாளர்கள் குமரவேல், சாதிக் பாட்சா ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஓய்வுபெற்ற உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
மொத்தம் 34 இடங்களில் நடைபெற்ற சோதனையின் முடிவில், வழக்குடன் தொடர்புடைய குற்றத்தை நிரூபிக்கக்கூடிய 825 ஆவணங்கள், 11 மின்னணு சாதனங்கள் மற்றும் 3 வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இந்த மணல் குவாரி முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
===========