”Are you ready to come face to face with me?" Opposition Leader Edappadi Palaniswami challenged Chief Minister MK Stalin Google
தமிழ்நாடு

”என்னோடு நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?” : ஸ்டாலினுக்கு EPS சவால்

Edappadi Palanisamy Challenge To CM MK Stalin : “என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

Kannan

எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி?

Edappadi Palanisamy Challenge To CM MK Stalin : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘திமுக செய்த திட்டங்களில் அதிமுக 5 சதவிகிதம் செய்திருக்கிறதா?’ என எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விடுத்து கேள்வி எழுப்பி இருந்தார்.

ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ‘‘நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே... நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

அதிமுகவின் சாதனைகள் - கள்ளக்குறிச்சி பேசும்

நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும்... அதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று! அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?

எங்கும், எல்லோரும் போராட்டம்

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, காலரை தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?

நான்கரை ஆண்டுகள் என்ன செஞ்சீங்க

20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா?

விடியா திமுக அரசு

செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.

மூச்சு இரைக்க வாசித்த பட்டியல்

மு.க.ஸ்டாலின் அவர்களே... நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல். இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா?

கவலைப்படாதீங்க

(கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!) அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் பெண்டிங்கில் இருக்கிறது.

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?

என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?’’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

=============