https://x.com/imkarjunsampath
தமிழ்நாடு

சமஸ்கிருதம் சாஸ்திர மொழி, இறைவனை பாடுவதற்கு தமிழ் : அர்ஜுன் சம்பத்

மொழிகளை வைத்து நம்மிடையே பிரிவினை உண்டாக்க நினைப்பவர்களுக்கு நாம் பலியாகக் கூடாது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

MTM

மதுரை காஞ்சி மகா பெரியவர் கோயிலில், அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் குருவார பூஜை நடந்தது. இதில் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது :

குருவின் திருவடி எனப்படும் பாதுகை மகத்துவமானது. ராமபிரான், நாட்டை விட்டுச் சென்றபோது அவரது பாதுகையை வைத்து தான் ஆட்சி செய்தார்கள். திருக்குறளின் கடவுள் வாழ்த்து குறள்களில் எட்டுக்குறள்கள் திருவடிப் பெருமைகளை தான் கூறுகிறது. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகத்தில் காஞ்சி மஹா பெரியவரின் பாதுகை இருக்கிறது. அதனை வழிபடுவது காஞ்சி பெரியவரின் அருளை நாம் பெற வழி வகுக்கும். பெருமாளுக்கு உரிய திருத்தலங்களில் அழகர்கோயில் மகத்துவமானது. அந்த மலையின் அடிவாரமான பொய்கைக்கரைப்பட்டியில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் காஞ்சி பெரியவருக்கு கோயில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

சனாதன தர்மத்தின் வடிவமே ஸ்ரீகாஞ்சி மகா பெரியவர்தான், அவரது தெய்வத்தின் குரலை படித்தால் எல்லோருக்கும் உண்மை புரியும். மதுரை ஆன்மீக பூமி, சனாதன தர்மத்திற்கு சாட்சியான ஊர். இங்கு நடந்த முருக மாநாடு மிகப்பெரிய மாற்றத்தையும் எழுச்சியையும் உண்டாக்கி இருக்கிறது.

தமிழ்க்கடவுள் முருகன் கோயில் குடமுழுக்கு தமிழ் மொழியில் நடக்க இருக்கிறது. இறைவனை பாடுவதற்காக உண்டாக்கப்பட்ட மொழி தமிழ், சமஸ்கிருதம் சாஸ்திர மொழி. மந்திரங்களை அதற்குரிய சமஸ்கிருதத்தில் தான் செய்ய வேண்டும், மந்திரங்களுக்கு மொழி கிடையாது. அது ஒலி வடிவம் கொண்டது. மொழியை சொல்லி யாரும் குழப்பத்தை உண்டாக்கினால் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அர்ஜுன் சம்பத் பேசினார்.