https://x.com/arulramadassMLA/media
தமிழ்நாடு

தவறான முன்னுதாரணம் ஆகிவிடுவாரோ!:அன்புமணி பற்றி எம்எல்ஏ அருள் கவலை

தந்தைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் அன்புமணி தவறான முன்னுதாரணமாக ஆகி விடுவாரோ என்று, பாமக எம்எல்ஏ அருள் கவலை தெரிவித்துள்ளார்.

Kannan

பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. இருவரும் நேரில் சந்தித்து கொள்வதில்லை. கட்சி நிர்வாகிகளை மாற்றி மாற்றி நீக்குவது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது என்று இருவரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தங்களுக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக இருவரும் வாதிட்டு வருகிறார்கள். இதனால், யாரை அழைத்தால் போவது? உண்மையில் முடிவெடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? எனப் புரியாமல் 2ம் கட்ட தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சில நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், பல மாவட்ட நிர்வாகிகள் அன்புமணி பக்கமும் நின்றாலும் தொண்டர்களின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.

ராமதாஸ் பக்கம் நின்று அவருக்கு குரல் கொடுக்கும், பாமக எம்எல்ஏ அருள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாட்டாளி மக்கள் கட்சியில் 45 ஆண்டுகளாக ராமதாஸ்தான் தொடர்ந்து நியமனங்களை வழங்கி வருவதாக கூறினார்.

கிளைச் செயலாளர் முதல் தலைவர் வரை பொறுப்பாளரை நியமிக்கும் முழு அதிகாரம் அவருக்கு மட்டுமே இருக்கிறது. பேராசிரியர் தீரன், ஜி.கே. மணி போன்றோர் தலைவர்களாக இருந்தபோதும் இதுதான் நடைமுறை.

நியமித்தல், நீக்குதல் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது.

தந்தைக்கு கட்டுப்பட மறுக்கும் அன்புமணியின் செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. அன்புமணி தவறான முன்னுதாரணமாகி விடுவாரோ என்ற அச்சம் எழுந்து இருப்பதாகவும், எம்எல்ஏ அருள் குறிப்பிட்டார்.

------