Ashwini Vaishnav hit back to Chief Minister Stalin, saying, "Tamil Nadu government is to blame for the delay in railway projects." Google
தமிழ்நாடு

ரயில்வே திட்டங்கள் தாமதம்?: CM ஸ்டாலினுக்கு அஸ்வினி வைஷ்ணவ் பதிலடி

“ரயில்வே திட்டங்கள் தாமதமாக தமிழக அரசே காரணம்’’ என்று, முதல்வர் - ஸ்டாலினுக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Kannan

ரயில்வேத்துறை - நிதி ஒதுக்கீடு

பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்திற்கு இரண்டு அதிவிரைவு ரயில் திட்டங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்று இருந்தன. ஆனால், தமிழகம் புறக்கணிப்பட்டு இருப்பதாக, திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கக்கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

தமிழகத்திற்கு முழுமையான நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

தமிழக வளர்ச்சியில் அதிக அக்கறை

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

2014ம் ஆண்டில் இருந்து மாநிலத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ரூ. 7,611 கோடி ஒதுக்கீடு

2026-27 நிதி ஆண்டில் இது ரூ. 7,611 கோடியாக உயரும். ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. எனவே, தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது மட்டுமே உண்மை.

நிலங்களை ஒப்படைப்பதில் தாமதம்

தற்போது நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலத்தில் 24% மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது, தேவைப்படும் 4,326 ஹெக்டேர் நிலத்தில் 1,052 ஹெக்டேர் நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் பணிகள் முடக்கம்

நிலம் கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளதால் பல முக்கிய திட்டங்கள் தாமதமாகி வருகின்றன. நிதிப் பற்றாக்குறையால் ரயில்வே திட்டங்கள் முடங்கவில்லை. அவ்வாறு கூறுவது ஆதாரமற்றது. பல திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதே முக்கிய பிரச்சினையாக உள்ளது.

மாநில அரசு கவனம் செலுத்தவில்லை

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான (144 கி.மீ.) புதிய ரயில்வே இருப்புப் பாதை திட்டத்துக்கு 91% நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது.

இதேபோல், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கான 71.33 கி.மீ. நீளம் கொண்ட புதிய ரயில்வே இருப்புப்பாதை திட்டத்துக்கு 86% நிலம் கையகப்படுத்தும் பணி நிலுவையில் உள்ளது.

பணிகளை தொடங்காத அரசு

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 2019ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டின் ஒத்துழைப்பின்மை காரணமாக இந்த திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை.

தமிழகத்திற்கு அதிக திட்டங்கள்

இத்தகைய சவால்கள் உள்ளபோதிலும், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு பல புதிய வழித்தடங்கள், இரட்டிப்புப் பாதைகள், 3வது மற்றும் 4-வது வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஆதரிப்பதற்காக மேலும் திறன் விரிவாக்கத்துக்கான வரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மறுவடிவம் பெறும் 77 ரயில் நிலையங்கள்

தமிழ்நாட்டில் மொத்தம் 77 ரயில் நிலையங்கள் முழுமையாக மறுவடிவமை செய்யப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில், 18 நிலையங்களுக்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 2014 முதல் தோராயமாக 1,350 கி.மீ. ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் ரயில்வே 97% மின்மயமாக்கலை எட்டியுள்ளது. 2014 முதல் 2,386 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வந்தே பாரத், அம்ரித் பாரத்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன ரயில்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு மேம்பட்ட, மலிவான ரயில் பயணத்தை உறுதி செய்கின்றன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 9 ஜோடி சேவைகள் தற்போது இயக்கத்தில் உள்ளன. அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸின் 9 ஜோடி சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

ஆதரவு அளித்தால், வளர்ச்சி உறுதி

மத்திய அரசு தயாராகவும் உறுதியாகவும் உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்குவதற்கு மாநில அரசின் சரியான நேரத்திலான ஆதரவு அத்தியாவசியமாகிறது’’ என அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

===================