பாமகவில் பிளவு
PMK Advocate Balu on GK Mani : பாமகவில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து, கட்சியை இரண்டாக உடைத்து இருக்கிறது. அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தாலும், அதை ஏற்க மறுத்த ராமதாஸ் தரப்பு சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அன்புமணி மீது புகார்
போலி ஆவணத்தை கொடுத்து பாமக தலைவராக அன்புமணி தொடர்வதாக, டெல்லி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு, பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதனால், கட்சியின் சின்னம், பெயர் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.
ராமதாஸ் தரப்பு கோமாளித்தனம்
இந்தநிலையில், அன்புமணி தரப்பை சேர்ந்த வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”பாமக தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரங்களை பார்க்காமல், தங்களுக்கு கிடைத்த வெற்றி என ராமதாஸ் தரப்பினர் கொண்டாடுவது கோமாளித்தனம்.
அன்புமணி தான் தலைவர்
'இரு தரப்புக்குமே மாம்பழச் சின்னம் இல்லை,' என சொன்னதாக கூறி, அதை வெற்றியாக கொண்டாடுகின்றனர். ஆனால், 'வரும் 2026 வரை, பா.ம.க., தலைவராக அன்புமணி தொடரலாம்' என்ற தேர்தல் கமிஷன் முடிவு. 'தவறு' என நீதிமன்றம் எங்குமே சொல்லவில்லை.
ராமதாஸ் தரப்புக்கு வெற்றி கிடைக்காது
எங்கள் அதிகாரத்தை பறிப்பதாகவோ, அவர்களிடம் அதிகாரத்தை கொடுப்பதாகவோ, தீர்ப்பில் எதுவும் இல்லை. ராமதாஸ் தரப்பினர், தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க, சிவில் கோர்ட்டுக்கு சென்று உத்தரவு பெற்று வர வேண்டும் என்று தான் டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் எதிர் தரப்பினரால், எங்கும் வெற்றி பெற முடியாது.
ராமதாஸ் பின்னணியில் திமுக
தேர்தலுக்காக, நாங்கள் பணியாற்றி வருவதை திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு, திமுகவே காரணம். ராமதாஸ் தரப்பை சேர்ந்த ஜி.கே.மணி, குறுஞ்செய்திகள் வாயிலாக, திமுக வழங்கும் கட்டளைகளை நிறைவேற்றி வருகிறார்.
பாமகவை உடைக்கும் ஜி.கே. மணி
பாமகவை உடைக்கும் வேலையை திமுக கட்டளைப்படி ஜி.கே. மேற்கொண்டு வருகிறார். உண்மையான பாமகவினர் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர் நினைப்பது ஒரு போதும் நடக்காது” இவ்வாறு பாலு பேட்டியளித்தார்.
=================