கோழிகள் தொடர்ந்து இறப்பு
கடந்த மாதம் 30 ஆம் தேதி தமனாம்பேட்டை கிராமத்தில் முதன்முறையாக கோழிகள் தொடர்ந்து இறப்பதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, மாநில மற்றும் போபால் மத்திய ஆய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
பறவை காய்ச்சல் உறுதி
பரிசோதனை முடிவுகளில், கட்டியாங்குப்பம் பகுதியில் 'பறவைக் காய்ச்சல்' பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
தடுப்பு நடவடிக்கைகள்
மத்திய அரசின் 2021 வழிகாட்டுதலின்படி, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 9 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கோழிகளைப் பாதுகாப்பான முறையில் குழிதோண்டிப் புதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
34,527 கோழிகள் உயிரிழப்பு
இதுவரை மொத்தம் 34,527 கோழிகள் இறந்துள்ளன.இன்று காலை நிலவரப்படி மட்டும் 1,550 கோழிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
அப்பகுதியில் உள்ள 15 பண்ணைகளில் 5 பண்ணைகளில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள கோழிகளை அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு
நோய் கண்டறியப்பட்ட கட்டியான்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் சுற்றளவு பகுதி தீவிரக் கண்காணிப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பாதிக்கப்பட்ட பண்ணைகள் மற்றும் 1 கி.மீ சுற்றளவில் உள்ள பண்ணைகளில் இருக்கும் கோழிகளைக் கால்நடைத் துறையினர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, குழி தோண்டிப் புதைத்து வருகின்றனர்.
கோழி இறைச்சி விற்பனைக்கு தடை
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் கோழிக்கறி, வாத்து உள்ளிட்ட பறவை இறைச்சிகளை விற்பனை செய்யவும், புதிய கோழிக் குஞ்சுகளைக் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருமிநாசினி தெளிப்பு
பாதிக்கப்பட்ட பண்ணைகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுத் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கோழிகளை வளர்க்க தடை
பாதிக்கப்பட்ட பண்ணைகளில் அடுத்த 90 நாட்களுக்குப் புதிதாக கோழிகளை வளர்க்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு 'டாமிப்ளூ' மாத்திரைகள்
பண்ணைகளில் பணியாற்றியவர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குச் சுகாதாரத்துறை மூலம் 'டாமிப்ளூ' மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்குக் காய்ச்சல், சளி அறிகுறிகள் உள்ளதா என்பதைக் கண்காணிக்கச் சிறப்பு மருத்துவ முகாம்களும் செயல்பட்டு வருகின்றன.
குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மட்டுமே உள்ளது; வேறு எங்கும் பரவவில்லை. குறிப்பாக, 25 முதல் 35 நாட்கள் வயதான கோழிகளையே இந்த வைரஸ் தாக்குகிறது.
விற்பனைக்கு வரும் கோழிகள் 65 முதல் 70 நாட்கள் வயதானவை என்பதால் அவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
எனவே, இறைச்சி உண்பவர்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
==================