செய்தியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ
Annamalai Condemns DMK MLA Attack Reporter in Karur : கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்ட கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது, எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கியதாக புகார்கள் எழுந்தன. மேலும், இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு கண்டனம்
இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது.
கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் அறிக்கை
இதைத்தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கனிம வளக் கொள்ளை நடப்பதை அம்பலப்படுத்த முயன்ற செய்தியாளர்களை திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்கியதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
எனவே, பழனியாண்டியையும், அவரது ஆதரவாளர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் ஆளுங்கட்சிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டால், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு காவல் படைகளை அனுப்பி கைது செய்யும் காவல்துறை.
கனிமக்கொள்ளையை அம்பலப்படுத்தியவர்களை தாக்கிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தயங்குவது ஏன்?
திமுகவில் உறுப்பினராக இருந்தால் அனைத்து சட்டவிரோத செயல்களையும் செய்ய உரிமம் பெற்றதாக பொருளா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் அறிக்கை
இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பழனியாண்டி நடத்திய தாக்குதல் கண்டனத்திற்குரியது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.
இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தூக்கி எறியப் போவது உறுதி. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: ஊடகவியலாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்தும் வீடியோ மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பழனியாண்டி உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.