அண்ணாமலை எக்ஸ் பதிவு
Annamalai Condemns DMK on Nurses Arrest for Protest in Chennai : சென்னை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய சுமார் 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு.
இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திமுக வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356 ல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரைக் குறித்துக் கூடக் கவலைப்படாமல், பொதுமக்கள் நலனுக்காக முன்னின்று பணியாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளாக, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய, அவர்கள் கோரிக்கை வைக்காத இடமே இல்லை. ஆனால், திமுக அரசு, அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
பொதுமக்களை திமுக எப்படி நடத்துகிறது என்பதற்கு உதாரணம்
செவிலியர்கள் கேட்பது, ஆட்சிக்கு வருவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான். அவர்களை தலைமைச்செயலகத்தில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை கேட்டுக்கொள்ளும் அடிப்படை மரியாதையைக் கூட, சுகாதாரத்துறை அமைச்சர் கொடுக்க மறுக்கிறார் என்பது, பொதுமக்களை திமுக எப்படி நடத்துகிறது என்பதற்கு உதாரணம்.
ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 2,472 செவிலியர்களைப் பணிநீக்கம் செய்ததை நாம் கண்டித்துக் குரல் கொடுத்திருந்தோம். தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம். செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.