செங்கோட்டையன் - பின்னடைவு கிடையாது
BJP Leader Nainar Nagendran on TVK Vijay : திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ டெல்லி பயணம் தனிப்பட்ட பயணம், இதில் எந்த அரசியலும் இல்லை. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பதால்(Sengottaiyan Join TVK) அதிமுக - பாஜக கூட்டணிக்கு பின்னடைவில்லை.
அதிமுக வாக்கு வங்கி தனியானது
செங்கோட்டையன் 1977 முதல் அரசியலில் இருக்கும் 50 ஆண்டுகால மூத்த தலைவர். அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அமைச்சரவையில் பணியாற்றியவர். அதிமுகவை பொறுத்தவரை அதற்கென தனி வாக்கு வங்கி உள்ளது. ஒரு தலைவர் விலகிச் செல்வதால் அந்த வாக்கு வங்கி அப்படியே அவருடன் செல்லுமா என்பது கேள்விக்குறிதான்.
கருத்து சொல்ல உரிமை உண்டு
தேர்தலுக்குப் பின்னரே அதன் தாக்கம் தெரியும். இதனால் பாஜக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறி உள்ளார். கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் எஜமானர்களான வாக்காளர்களே அதை முடிவு செய்வார்கள்.
மக்கள் ரூ.5,000 எதிர்பார்க்கிறார்கள்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்துவரி மற்றும் மின்கட்டணத்தை 300% உயர்த்தியுள்ளது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், கடந்த முறை ரூ.1000 கொடுத்தார்கள்(TN Pongal Prize). இந்த முறை மக்கள் ரூ.5000 எதிர்பார்க்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை
முதலமைச்சர் என் தொகுதிக்கு பாலம், ரோடு, கல்லூரி என நிறைய நன்மைகளைச் செய்துள்ளார். அதேபோல் மக்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று நானும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் ரூ.1 லட்சம் வரை நஷ்டத்தில் இருக்கும்போது, வெறும் ரூ.1000 கொடுத்தால் ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகமே. மின்சாரம், பால் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவோடு தவெகவை ஒப்பிடக் கூடாது
பாஜக 1600-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், 300-க்கும் மேற்பட்ட எம்பிக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கட்சி. தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. எடுத்தவுடனேயே 'லாங் ஜம்ப்' செய்து உலகத்தையே தாண்டுவேன் என்று சொல்வது சரியாக இருக்காது.
விஜய் தேர்தலில் நிற்கட்டும்
விஜய் தேர்தலில் நின்று தன் பலத்தை நிரூபித்துவிட்டு பிறகு பேசலாம். எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் முன்பே எம்எல்ஏவாகவும், திமுகவின் முகமாகவும் இருந்தார். ஆனால் விஜய் இப்போது நடிகராக மட்டுமே உள்ளார்.
2026ல் என்டிஏ ஆட்சி தான்
செங்கோட்டையன் விலகலின் பின்னணியில் பாஜக இருப்பதாகத் திருமாவளவன் சொல்வது தவறானது. பாஜக பின்னணியில் இருந்தால் அவர் ஏன் தவெக-விற்கு செல்ல வேண்டும், பாஜகவிற்கே வந்திருக்கலாமே. டிடிவி தினகரன் கூறியது போல் மூன்றாவது அணி அமைந்தாலும், நான்காவது அணி அமைந்தாலும், 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும்” என்று நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார்.
=================