பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் :
Nainar Nagendran on DMK Government : கிராமப்புற மக்களின் வறுமையை போக்கும் விதமாக “பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை(Pradhan Mantri Gram Sadak Yojana), 2000வது ஆண்டு டிசம்பர் 25ம் தேதி மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. அனைத்து காலங்களிலும் அதாவது ஆண்டு முழுவதும் உதவக்கூடிய வகையில் சிறுபாலங்கள் மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கிராமங்களிலும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
சாலை போடப்பட்டதாக விளம்பர பலகை
அந்த வகையில், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 4.63 கோடி ரூபாயில், தூத்துக்குடி மாவட்டம் கீழ்நாட்டுக்குறிச்சி - தாப்பாத்தி இடையே சாலை(Keelnattukurichi Thappathi Road) அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இந்தச் சாலையை அமைக்காமல், சாலை போடப்பட்டதாக, விளம்பர பலகையை மட்டும் வைத்து சென்றிருக்கிறது திமுக அரசு.
பணத்தை சுருட்டுவது திராவிட மாடலா?
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “சாலையின்றித் தவிக்கும் கிராம மக்களுக்கு வரப்பிரசாதமாக மத்திய அரசு வழங்கிய திட்டத்தை செயல்படுத்தாமல், மக்களை வதைத்துவிட்டு, வழங்கிய நிதியை மட்டும் வாரி சுருட்டிக்கொள்வது தான் திராவிட மாடலா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் படிக்க : Modi 25 Years: பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த நயினார் நாகேந்திரன்!
அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்
”மக்கள் வரிப்பணத்தை மோசடி செய்து தங்கள் சொந்த கஜானாவை நிரப்பிக் கொண்டு விளம்பரம் மட்டும் செய்துகொள்வதற்கு திமுகவினர் வெட்கித் தலைகுனிய வேண்டும். சாலை அமைக்காத திமுக அரசைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட பாஜகவினர் போராட்டம்(BJP Protest in Thoothukudi) நடத்திய நிலையில், உடனடியாக ஒப்பந்ததாரர் எர்ஷாத்கான் மீது நடவடிக்கை எடுத்து சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழக பாஜக சார்பாக மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
===============