சாதிப் பெயர்களை நீக்க உத்தரவு
Annamalai Condemns DMK Government on Caste Name : தமிழகத்தில் ஊர்களின் பொது குடியிருப்புகள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் பொது கட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி விட்டு பூக்களின் பெயர்களையும், திருவள்ளூவர், பாரதியார், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்களை வைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்பேத்கர், எம்ஜிஆர் பெயர் இல்லை
தலைவர்கள் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் பெயர்கள், தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இல்லாததற்கு பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக அரசுக்கு கண்டனம் :
இந்நிலையில், சாதி பெயர்கள் ஒழிப்பு என்ற போர்வையில் கருணாநிதி பெயரை திணிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜாதிப்பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஜாதிப்பெயர்களுக்கான மாற்றுப் பெயர்களை வைக்க சில எடுத்துக்காட்டுகளையும் வழங்கி இருக்கிறது.
அம்பேத்கர், கொடிகாத்த குமரன் பெயர்?
அவற்றில், மாபெரும் தலைவர்களான, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை திமுக அரசு புறக்கணித்திருப்பது ஏன்? அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே திமுக அரசு பார்க்கிறதா?
சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்?
மேலும், திமுக அரசு கொடுத்துள்ள பட்டியலில், ராணி வேலு நாச்சியார், கொடிகாத்த குமரன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தமிழகத்தின் பெருமைக்குரிய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களையும் புறக்கணித்திருக்கிறது.
கருணாநிதி பெயருக்கு முன்னுரிமை
அந்தப் பட்டியலில் இருக்கும் மாபெரும் தலைவர்கள் யார் என்று பார்த்தால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தனக்குத்தானே சிலை வைப்பது, தனக்குத் தானே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வது என்று உங்கள் தந்தை செய்த நகைச்சுவைகள் போதாதென, தற்போது பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, அவரை மிஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. உங்கள் குடும்ப நிறுவனங்களுக்கே உங்கள் தந்தை பெயரை வைக்காத நீங்கள், பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள்?
மேலும் படிக்க : காஸாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை - அண்ணாமலை!
எம்ஜிஆர் பெயரை விட்டது எதற்காக?
முன்னாள் முதல்வர்கள் பெயரை வைக்கிறோம் என்றால், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பெயர் எங்கே? சாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திருத்தி, மேற்கூறிய அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் இணைத்து, புதிய அரசாணையை வெளியிட வலியுறுத்துகிறேன்'' இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
===