முதல்வர் பெயரில் திட்டங்கள் :
தமிழகத்தில் ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்டு 2ம் தேதியான நாளை முதல் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படுகிறது. "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் விளம்பரங்களில் அரசு முத்திரை, முன்னாள் முதல்வர் கருணாநிதி, இன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
திட்டங்களுக்கு எதிர்ப்பு, நீதிமன்றத்தில் வழக்கு :
இந்தநிலையில், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை நீக்க கோரி அதிமுக எம்பி சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதிமுக வழக்கறிஞர் இனியன் என்பவரும் தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதிமுக தரப்பு வாதம் :
வழக்கு விசாரணைக்கு வந்த போது, வாதிட்ட அதிமுக வழக்கறிஞர்கள், ’அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. கடந்த ஆட்சியில் "அம்மா" என்ற பெயரில் திட்டங்கள் இருந்ததற்கும், தற்போதைய "ஸ்டாலின்" என்ற பெயருக்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டினர்.
திமுக தரப்பு வாதம் :
அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என திமுக தரப்பு வாதிட்டது. கடந்த ஆட்சியில் "அம்மா உணவகம்", "அம்மா திட்டம்" போன்ற பெயர்கள் பயன்படுத்தப்பட்டதையும், மத்திய அரசால் "நமோ" என்ற பெயரில் திட்டங்கள் தொடங்கப்பட்டதையும், ஆந்திராவில் "ஜெகன் திட்டம்" ஆரம்பிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இது வழக்கமானது என வாதிட்டது.
நீதிபதிகள் கருத்து :
அரசின் திட்டங்கள் மக்களுக்கானவை என்பதால், அதில் அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
தனிநபர் பெயரை விளம்பரப்படுத்தக் கூடாது :
அரசின் திட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள், படங்கள் அல்லது அரசியல் முத்திரைகளைப் பயன்படுத்துவதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அரசின் திட்டங்கள் தனிப்பட்ட நபர்களின் சாதனைகளாக விளம்பரப்படுத்தப்படுவது தவறானது என நீதிமன்றம் கருதுகிறது.
"அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது” அதை சமயம் நாளை தொடங்கப்படும் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்திற்குத் தடை இல்லை. இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.
====