தமிழக இடைத்தேர்தல்
ஏப்ரல் மாசம் நடந்த சட்டமன்ற தேர்தலில மதுராந்தகத்துல மரகதம் குமரவேல், தாராபுரத்தில சத்ய பாமா, அதிமுக சார்பில வெற்றி பெற்றாங்க. இருந்தாலும், எம்எல்ஏ பதவிய ராஜினாமா செஞ்சிட்டு தவெகவில இணைஞ்சாங்க.
5 முனைப்போட்டி
இதனால, இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்துச்சு. ஆளுங்கட்சியான தவெக, எதிர்கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்களை இறக்க, அவங்களுக்கு போட்டியா நாம் தமிழர், கம்யூனிஸ்டுகளும் களத்துக்கு வந்தாங்க.
5 முனைப்போட்டி இருந்தாலும், முதல்வர் விஜய்யோட பிரச்சாரம், அதிமுகவில் எடப்பாடிக்கு எதிரான அதிருப்தி, பாமகவின் மறைமுக ஆதரவு, தவெக வேட்பாளர்களை வெற்றி பெற வச்சுது.
மதுராந்தகம் - தவெக வெற்றி
மதுராந்தகத்துல தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், 74,048 ஓட்டுகள் வாங்கி மீண்டும் வெற்றி பெற்றாங்க. 20,040 வாக்குகள் வித்தியாசத்தில அவரோட வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
தாராபுரம் - தவெக வெற்றி
தாராபுரத்தில தவெக வேட்பாளர் சத்ய பாமா சில சுற்றுகளில பின்தங்க, அதிமுக முன்னிலை வகிச்சுது. இதனால, ரிசல்ட் மாறுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், மீண்டும் எழுச்சி பெற்ற சத்ய பாமா, இறுதியா 9, 471 வாக்குகள் வித்தியாசத்தில வெற்றி பெற்றாங்க.
தவெக பலம் 109
சட்டமன்றத்துல 107 இடங்களா இருந்த தவெகவோட பலம் 109ஆ உயர்ந்து இருக்கு. ஆனா இது அமோக வெற்றியா அப்படின்னு பார்த்தா இல்லன்னு தான் சொல்லணும்.
தவெகவுக்கு கிடைத்த பாடம்
இதை முதல்வர் விஜய்க்கு கிடைச்ச சிறப்பான வெற்றி அப்படின்னு பார்த்தாலும், தவெகவை பொருத்தவை முதலில் சந்தித்த இடைத்தேர்தல்கள் இவை. மதுராந்தகத்துல சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, அது பரவாயில்லை. ஆனா தாராபுரத்துல 10 ஆயிரத்துக்குள்ள தான் வெற்றியை மக்கள் பரிசா கொடுத்து இருக்காங்க.
அதுவும் முதல்வர் விஜய் ரோடு ஷோ, டீக்கடை விஜய், டிராக்டர் ஓட்டியது, முருங்கைகாய் பறிச்சது அப்படின்னு மக்களை யதார்த்தமா போய் சந்திச்சது முக்கிய காரணம்.
தவெகவை தூக்கி நிறுத்திய பாமக
ஒன்னு அதிமுக டெபாசிட் இழந்து இருக்கணும், இல்ல திமுகவோட வாக்கு வங்கி சரிந்து இருக்கணும். இரண்டுமே நடக்கல. காங்கிரஸ், விசிக, ஐயுஎம்ல் கூட்டணி பலம், பாமகவின் மறைமுக ஆதரவு, தவெகவை தூக்கி நிறுத்தி இருக்கு.
தவெக மீது மக்களின் மதிப்பீடு
இன்னும் 5 இடைத்தேர்தல் வர இருக்கு. இவற்றிலாவது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி பெறணும். காரணம் திமுகவுக்கு கிடைச்சு இருக்கிற வாக்குகளை பார்க்கும் போது, ஏப்ரல் மாதம் அந்தக் கட்சி மீது இருந்த அதிருப்தி இப்போ மக்கள் கிட்ட இல்ல. இதை தவெக மக்கள் கொடுக்கிற எச்சரிக்கையா எடுத்துக் கிட்டு செயல்பட வேண்டும்.
திமுகவுக்கு அக்னி பரீட்சை
ஆளுங்கட்சியா இருந்து எதிர்க்கட்சியான திமுகவுக்கு இடைத்தேர்தல் ஒரு அக்னிபரீட்சையா தான் இருந்துச்சு. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி போன்றவங்க சூறாவளியா சுற்றி வாக்கு சேகரிச்சாங்க.
இருந்தாலும், தவெக வேட்பாளர்கள் பத்தி அவங்க செஞ்ச விமர்சனம், மக்களை முகம் சுளிக்க வச்சுது. தேமுதிகவை மட்டும் கூட்டணியில வச்சிக்கிட்டு களத்துக்கு வந்தது திமுக.
திமுகவுக்கு 2வது இடம்
மதுராந்தகம் தொகுதியில திமுக 2வது இடத்த பிடிச்சு 54 ஆயிரத்து எட்டு வாக்குகளை வாங்கிச்சு. இதை மக்கள் தங்களுக்கு கொடுத்த அங்கீகாரம திமுகவினர் பார்க்கிறாங்க. வாக்கு வங்கியில பெரிய சரிவில்லை.
வாக்கு வங்கியில் சரிவில்லை
எதிர்க்கட்சியா உரிய இடத்த மக்கள் கொடுத்து இருக்காங்க. தாராபுரம் தொகுதியில் திமுகவுக்கு 57 ஆயிரத்து 370 வாக்குகள் கிடைச்சது. எனவே, இரண்டு தொகுதிகளிலும் மக்கள் திமுகவுக்கு 2வது இடம் கிடைச்சு இருக்காங்க. இதன்மூலமா, தவெகவிற்கும் மக்கள் வார்னிங் கொடுத்து இருக்காங்க.
அதிமுகவுக்கு பெரிய சறுக்கல்
அடுத்ததா, அதிமுகவை பொருத்தவரை இந்த தேர்தல் முடிவு மிகப்பெரிய சறுக்கல். பொதுத்தேர்தல்ல 47 இடங்கள அதிமுக வென்றுச்சு. எடப்பாடி மீதான அதிருப்தியால, 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசை ஆதரிச்சாங்க.
அதிமுக எம்எல்ஏக்கள் கலகம்
இவங்கள்ல 6 பேர் பதவிய ராஜினாமா செய்ய மத்த 18 பேரும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பிட்டாங்க. இருந்தாலும் கலகம் மட்டும் ஓயவே இல்லை. எடப்பாடி எதிரா போர்க்கொடி பிடிச்ச சி.வி. சண்முகம், எஸ்பி வேலுமணி, தங்கமணி போன்றவங்க, மறைமுகமா தவெக வெற்றிக்கு பாடுபட்டாங்க.
இதனால மதுராந்தகத்துல அதிமுகவுக்கு 47 ஆயிரத்து 450 வாக்குகள் தான் கிடைச்சுது. தாராபுரத்தில அதிமுக 45280 வாக்குகள் பெற்றது. ஏப்ரல் போதுத்தேர்தலில் தவெகவின் செல்வாக்கு, திமுகவின் வாக்கு வங்கிய மீறி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்த அதிமுக, தோல்வி அடைஞ்சது மட்டுமல்லாம, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கு.
கொங்கு மண்டலத்துல அந்தக் கட்சியோட செல்வாக்கு சரிஞ்சி இருக்கு. பாமக ஆதரவு கொடுக்காம போனதும் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம்.
எடப்பாடியாருக்கு கடும் நெருக்கடி
இடைத்தேர்தல் முடிவுகள், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கு. கட்சிக்குள் இனி கலகக்குரல்கள் அதிகமா கேட்க போகுது. அதிமுக தோல்விக்கு எடப்பாடியாரே காரணம் என குற்றச்சாட்டுகள் அதிகமா வீசப்பட இருக்கின்றன.
28 எம்எல்ஏக்கள் எதிர்ப்பா?
ஏற்கனவே, தவெகவுக்கு ஆதரவு தெரிவிச்சு, பின்னர் கட்சிக்கு திரும்பிய 19 பேர் மட்டும் அல்லாம மேலும் பல எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்க இருக்கிறதா சொல்லப்படுது. அந்த வகையில 28 எம்எல்ஏக்கள் எடப்பாடிய எதிர்த்து தனி அணியா செயல்பட போறதாகவும், அவங்க மேலே கட்சி தாவல் நடவடிக்கை பாய வாய்ப்பில்லைன்னும் தகவல் வெளியாகி இருக்கு.
எடப்பாடி பதவிக்கு ஆபத்து
எனவே, எடப்பாடியின் பொதுச் செயலாளர் பதவிக்கு தலைக்கு மேலே தொங்குற கத்தி போல ஆபத்து காத்திருக்கு. அப்படி, அதிமுக 2 அணியா உடைஞ்சா அது, தவெகவிற்கு பெரிய சாதகமாக அமைய போகுது. சிலரை அமைச்சராக்கினால், 5 ஆண்டுகளுக்கு கவலை இல்லாமல், ஆட்சியை தொடரலாம்.
தேய்ந்து போன கம்யூனிஸ்டுகள்
தவெக கூட்டணியில் இருந்தாலும், தனித்து போட்டியிட்ட கம்யூனிஸ்டுகளால், 2 ஆயிரம் வாக்குகள் வரைதான் வாங்க முடிஞ்சது. எனவே, இனி கம்யூனிஸ்டுகள் ஆதரவு வாபஸ் பெறப்பட்டாலும் தவெகவிற்கு பாதிப்பு இருக்காது. ஏன்னா, பாமகவின் 4 எம்எல்ஏக்கள் ஆதரவுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கு.
கட்சிகளுக்கு சொல்லும் பாடம்
எனவே, இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளும் வேறுவேறு பாடத்தை சொல்லி கொடுத்து இருக்கு. ஆளும் தவெகவுக்கான ரிப்போர்ட் கார்டு படி பார்த்தா, வெற்றி ஓகே, ஆனா கிடைச்சு இருக்கும் வாக்குகள் வார்னிங் தான்.
எதிர்க்கட்சிகளை பொருத்துவரை திமுகவின் வாக்கு வங்கி நிரூபிக்கப்பட்டு, அந்தக் கட்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து இருக்கு.
3வது இடத்திற்கு போய் இருக்கிற அதிமுக, சுயபரிசோதனை செஞ்சி, சறுக்கல்களை கண்டிறியா விட்டா, இனி எழவே முடியாது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி இல்லாம, இனி வெற்றியை நினைத்து கூட பார்க்க முடியாது.
இப்படி கலவையான முடிவுகளை கொடுத்து இருக்கிற இடைத்தேர்தல் ரிசல்ட்ஸ், 5 தொகுதி தேர்தல்ல எப்படிப்பட்ட தீர்ப்பை எழுத போகுது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கு.
==================