cabinet meeting held under CM Vijay discussions on new industrial investments and election promises source:thamizhalai,ai generated
தமிழ்நாடு

"சமூக நீதி கணக்கெடுப்பு நடத்த ஆணையம்" : முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் : நான்கு முக்கிய முடிவுகள்...!

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகள், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Kannan

தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடக்கும் மூன்றாவது அமைச்சரவை கூட்டம் இது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.

அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலனை

தமிழ்நாட்டில் புதிதாகத் தொழில் தொடங்க முன்வந்துள்ள நிறுவனங்களின் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது, ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான முன்மொழிவுகள், அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.

புதிய தலைமைச் செயலகம் குறித்தும் ஆலோசனை

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடங்களைப் பரிசீலிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விவாதம்

இதையடுத்து, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 436 திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சமூகநீதி கணக்கெடுப்பு நடத்த ஆணையம்

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சமூகநீதி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

வளர்ச்சியை முன்னெடுக்க ஆலோசனை

தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒவ்வொரு துறையும் எட்ட வேண்டிய இலக்குகள், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் நிர்மல் குமார்,

8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல்

அமைச்சரவை கூட்டத்தில் 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு

சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் அது முடிந்தபிறகு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக நீதி ஆணையம் அமைத்து கணக்கெடுப்பு நடைபெறும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழம்பூர் கிராம மக்களுக்கு அவர்களின் நிலம் ஒப்படைக்கும் பொருட்டு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

===================