மாநிலத்தின் தலைவர் ஆளுநர்
இந்திய ஜனநாயகத்தில், ஒரு மாநிலத்தின் அரசியலமைப்பு தலைவராக இருப்பவர் தான் ஆளுநர் (Governor).
விவாதப் பொருளாகும் ஆளுநர்களின் செயல்பாடு
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஒரு கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் மிக முக்கியமான கடமை.
ஆனாலும், சில நேரங்களில் ஆளுநர் ஒரு குறிப்பிட்ட கட்சியை அழைக்க மறுப்பதும், அது பெரும் அரசியல் விவாதங்களுக்கு உள்ளாவதும் இந்திய அரசியலுக்கு புதிது ஒன்றும் கிடையாது.
ஆளுநரின் அதிகாரம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164-வது பிரிவின்படி, முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பார்.
ஒரு கட்சிக்குத் தெளிவான பெரும்பான்மை (50% இடங்களுக்கு மேல்) இருக்கும்போது, அக்கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை.
தொங்கு சட்டசபை - முடிவு ஆளுநர் கையில்
அதேசமயம், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டமன்ற’ (Hung Assembly) சூழலில், ஆளுநரின் ‘விருப்ப அதிகாரம்‘ (Discretionary Power) முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருக்கிறது.
அந்த சமயத்தில் ஒரு கட்சி அமைக்க அழைப்பு விடுக்க மறுப்பது, அல்லது காலதாமதம் செய்வதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.
ஒரு கட்சி பெரும்பான்மை இருப்பதாகக் கூறி, அதற்கான ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், நிலையான ஆட்சி குறித்த சந்தேகம் ஆளுநருக்கு எழும். அப்போது, அவர் அழைக்க மறுப்பு தெரிவிக்கலம்.
தமிழக அரசியல் களம்
உதாரணம் தமிழகத்தில் தற்போதைய சூழல் தவெகவிற்கு 107 உறுப்பினர்கள், காங்கிரஸ் ஆதரவு 5 என இருந்தாலும், 118 என்ற மேஜிக் எண் இதுவரை வரவில்லை.
உறுதிகாட்டும் ஆளுநர்
முதல்வர் பதவியேற்ற பிறகு 118-ஐ எட்டா விட்டால், இதுவே, தமிழக ஆளுநர் ஆலேக்கரின் நிலைப்பாடு. எனவேதான், விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை காட்ட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகை பிடிவாதமாக நிற்கிறது.
சட்ட வல்லுனர்களின் கருத்து
ஆளுநர் ஒரு கட்சியை அழைக்க மறுக்க முடியுமா என்ற கேள்விக்குச் சட்ட வல்லுநர்கள் இருவிதமான பதில்களை தருகின்றனர்.
சர்க்காரிய கமிஷன்
தொங்கு சட்டமன்றம் அமையும் போது, ஆளுநர் முதலில் ‘தனிப்பெரும் கட்சிக்கு’ (Single Largest Party) தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அவர்களை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க (Floor Test) அவகாசம் அளிக்க வேண்டும் என்று சர்க்காரிய கமிஷன் பரிந்துரைக்கிறது.
எஸ்.ஆர். பொம்மை வழக்கு
ஒரு அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் முடிவு செய்யக் கூடாது.
அதனைச் சட்டமன்றத் தளத்தில் (Floor Test) மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எஸ்ஆர். பொம்மை வழக்கில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
குதிரை பேரம் - வழிவகுக்கும்
108 இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆளுநர் முதலில் அழைத்து, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டும்.
ராஜ்பவனிலேயே 118 பேரின் கையெழுத்தைக் கேட்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இது ‘குதிரை பேரத்திற்கு’ (Horse Trading) வழிவகுக்கும் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
தமிழக அரசியலில் நிலவும் இந்த தேக்கநிலை, ஆளுநரின் ‘விருப்ப அதிகாரம்’ எங்கு முடிகிறது? அரசியலமைப்புச் சட்டத்தின் கடமை எங்கு தொடங்குகிறது என்ற புள்ளியில் வந்து நிற்கிறது.
மே 10க்குள் முடிவு
மே 10ம் தேதிக்குள் புதிய அரசு அமைய வேண்டிய கட்டாயம் உள்ளதால், அடுத்த 48 மணிநேரம் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
மக்கள் எதிர்பார்த்த தவெக ஆட்சியா? அல்லது திமுக-அதிமுக கூட்டணி ஆட்சியா? அல்லது குடியரசு தலைவர் ஆட்சியா? என்ற முடிவு தெரிந்து விடும்.