Case challenging Vijay's election victory in Perambur: Madras High Court orders issuance of fresh notice!
சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அவரது வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கில், முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு மீண்டும் புதிதாக நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கின் பின்னணி
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், மொத்தம் 1,20,365 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை (66,650 வாக்குகள்) விட 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
திமுக வேட்பாளரின் குற்றச்சாட்டு
வேட்புமனுவில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சொத்து விவரங்கள் மற்றும் வழக்குகள் குறித்த விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை.
எனவே, பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு முந்தைய நோட்டீஸ் சென்றடையவில்லை என்பதைத் தெரிவித்தார்.
புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, தமிழக முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
====