உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கடந்த மே 13-ம் தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தபோது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
தகுதி நீக்க மனுவை திரும்பப்பெற்ற எடப்பாடி பழனிசாமி
இதில் 4 பேர் ராஜிநாமா செய்த நிலையில், மீதமுள்ள 21 எம்.எல்.ஏ-க்கள் மன்னிப்பு கோரியதால் அவர்கள் மீதான தகுதி நீக்க மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றார்.
இதை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
மனுதாரர் தரப்பு வாதம்
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், "கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரமில்லை.
அரசியல் சாசன கேலிக்கூத்து
கொறடா உத்தரவை மீறிய கணத்திலேயே அவர்கள் தாமாகப் பதவியை துறப்பதாகவே அர்த்தம். அவர்களின் மன்னிப்பை ஏற்று தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிட்டது அரசியல் சாசன கேலிக்கூத்து" என வாதிட்டார்.
அரசுத் தரப்பு விளக்கம்
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடுகையில், "இந்த விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையிலான உள் விவகாரமாகும்.
பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது
அதிமுக பொதுச்செயலாளர் உறுப்பினர்களை மன்னித்துவிட்டதால், அவர்கள் தொடர்ந்து கட்சி உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். இதில் மூன்றாம் நபர் ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது" என்று சுட்டிக்காட்டினார்.
நீதிபதிகளின் கேள்விகள் மற்றும் கருத்துகள்
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், கொறடா உத்தரவை மீறியவர்களை கட்சியே மன்னித்துவிட்டதால் அவர்கள் உறுப்பினர்களாகவே தொடர்கின்றனர், அவர்கள் ராஜிநாமாவும் செய்யவில்லை.
இதில் என்ன தவறு உள்ளது?
சட்டப்படி 15 நாட்களுக்குள் மன்னித்து தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் என்ன தவறு உள்ளது? எனக் கேள்வி எழுப்பினர்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
தற்போதைய நிலையில் எந்தவிதக் கட்சித் தாவல் நடவடிக்கையும் நிலுவையில் இல்லை என்று இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
=====