Paramakudi To Ramanapuram Four Lane Highway : டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் பற்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
மதுரை – ராமேஸ்வரம் – தனுஷ்கோடி முனையம் ஆகிய புனித தலங்களை இணைக்கு வகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று, பரமக்குடி – ராமநாதபுரம் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது.
இதற்காக ரூ.1,853 கோடி ஒதுக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 46.7 கி.மீ. தூரத்துக்கு பரமக்குடி – ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ராமநாதபுரம் – தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இதையும் மத்திய அரசு நிறைவேற்றும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தற்போது இந்த பாதையில் செல்லும் வாகனங்களின் சராசரி வேகம் 48 கிமீ மட்டுமே. ஆனால் திட்டம் நிறைவு பெற்ற பிறகு 80 கிலோ மீட்டராக அதிகரிக்கும். இதனால் பயண நேரம் சுமார் 40% குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்ல 60 நிமிடங்கள் ஆகிறது, இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால், இனி வெறும் 35 நிமிடங்களில் ராமநாதபுரத்திற்கு சென்று விடலாம்.
இந்த திட்டத்தால் மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் போக்குவரத்து வசதி விரைவுபடும். மேலும் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளுக்கான சுற்றுலா வளர்ச்சியும் அதிகரிக்கும்.