Chennai, considered one of India's greatest landmarks, is celebrating its 387th birthday today AI generated
தமிழ்நாடு

”சென்னைக்கு வயது 387” : பிறந்தநாள் கொண்டாட என்ன காரணம்? : சுவாரஸ்ய பின்னணி, முழு தகவல்...!

இந்தியாவின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை பெரு நகரம், தனது 387வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறது.

Kannan

ஒரு காலத்தில் மெட்ராஸ், இன்று சென்னை

”வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின்" தலைநகர் தான் சென்னை. ஒரு காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. பிழைப்புத் தேடி வந்தவர்களை இந்த மாநகரம் என்றுமே கைவிட்டது கிடையாது.

வந்தாரை வாழவைக்கும் சென்னை

தமிழகத்தில் 39 மாவட்டங்கள் இருந்தாலும் சென்னைக்கு அதிகம் பேர் புலம்பெயர்ந்து வருகிறார்கள். தீபாவளி, பொங்கல், நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு எத்தனை லட்சம் பேர் படையெடுக்கிறார்கள் என்பதை பார்த்தாலே இந்த உண்மை தெரியும்.

சென்னைக்கு வயது 387

இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் ஒன்று சென்னை. இந்த நகரம் இன்று 387வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் ஏன் கொண்டாடப்படுது. அதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்.

1639ல் உருவான சென்னப்பட்டினம்

1639ம் ஆண்டு இதே நாளில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி பிரான்சிஸ் டே சென்னை பூந்தமல்லியை சேர்ந்த அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரிடம் இருந்து தற்போது தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சிறு கிராமத்தை விலைக்கு வாங்கினார்.

அந்த இடத்திற்கு பத்திரம் பதிவு செய்யப்பட்ட நாள் 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆகும். அந்தநாளே சென்னையின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.

சென்னையாக மாறிய சென்னப்பட்டினம்

2004ம் ஆண்டு முதல் இந்த தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சென்னப்பட்டினம், மதராசப்பட்டினம், மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த இந்த நகரம் பின்னாளில் சென்னை என்றானது.

பாரம்பரியத்தின் பொக்கிஷம்

இங்கு பழமையும் புதுமையும் வாய்ந்த கட்டடங்களை கொண்டு பாரம்பரியத்தின் பொக்கிஷமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் சென்னைக்கு வருபவர்கள் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டடத்தை அன்னாந்து பார்த்து செல்வர். ஆனால் இன்று அதை விட பெரிய பெரிய கட்டடங்கள் அதிகமாகி விட்டது.

சென்னை பெருநகரம்

சென்னையின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருநாளைக்கு சராசரியாக 10,000 பேர் சென்னையை நாடி வருவதாக கூறப்படுகிறது.

மழைக்காலங்களில் வெள்ளத்தில் தத்தளிப்பதும் வெயில் காலத்தில் ஒரு சொட்டு தண்ணீருக்கு கஷ்டப்படுவதும் என சென்னையின் வாடிக்கை என்றாலும் கம்பீரம் என்பது எப்போதும் குறையவில்லை.

இளைஞர்களின் கனவு நகரம் சென்னை

சென்னையில் வாங்க வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களின் கனவாகவே இருக்கிறது. பலரது கனவு! இதனால் பலர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் வந்தாலும் சென்னை அரவணைத்துக் கொண்டு அவர்களுக்கு அன்பை வாரி கொடுத்து வருகிறது.

பெட்டிக் கடை வைத்தாலும் சென்னையில் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இன்று வரை பொய்த்து போனதே கிடையாது. இப்படி பல காரணங்களை சென்னை நகரின் சிறப்புக்காக அடுக்கிக் கொண்டே போகலாம்.

=====================