https://x.com/ChennaiTraffic
தமிழ்நாடு

கனரக வாகன கட்டுப்பாடு : பள்ளி சிறுமி பலியானதற்கு பிறகு நடவடிக்கை

தண்ணீர் லாரி மோதி பள்ளி சிறுமி உயிரிழந்ததையடுத்து சென்னைக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

MTM

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி சவுமியா, தன் தாயுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.நேரக்கட்டுப்பாடுகளை கனரக வாகனங்கள் பின்பற்றுவதில்லை என்றும் காவல்துறை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

பள்ளி சிறுமி பலியான விவகாரத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். நேரக் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் அதிகளவில் சாலையை பயன்படுத்தும் நேரத்தில் தண்ணீர் லாரியை அனுமதித்த குற்றச்சாட்டில் செம்பியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புளியந்தோப்பு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது. பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் காவல்துறையினர் கட்டாயம் ஈடுபட வேண்டும்.

கவனக் குறைவாக செயல்பட்டு விபத்து உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்குள் ஒப்படைக்கக்கூடாது. காலை 7 மணிமுதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.