Chennai Weather Update Coimbatore Nilgiris Yellow Alert July 10 google
தமிழ்நாடு

கோவை, நீலகிரிக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை: அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

கோவை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளுக்குப் பலத்த மழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சின்னக்கல்லாறில் அதிகபட்சமாக 180 மி.மீ மழை பதிவு.

Kavitha prasanna

Chennai Weather Update Coimbatore Nilgiris Yellow Alert July 10

தெற்கு குஜராத் முதல் வடக்கு கேரளா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரிக்கு மஞ்சள் எச்சரிக்கை ஏன்?

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 10) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகம்) பலத்த மழை பெய்யக்கூடும்.

இதன் காரணமாக இந்த இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐந்து நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள்: இன்று முதல் (ஜூலை 10 ) ஜூலை 15 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

ஏனைய தமிழகப் பகுதிகள்

தமிழகத்தின் பிற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முக்கியப் பகுதிகளில் பதிவான மழை விபரம்

  • சின்னக்கல்லாறு (கோவை) - 180 மி.மீ

  • சோலையாறு (கோவை) - 110 மி.மீ

  • சின்கோனா, வால்பாறை, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), அவலாஞ்சி (நீலகிரி) - தலா 90 மி.மீ

  • உபாசி (கோவை) - 80 மி.மீ

  • மேல் பவானி (நீலகிரி) - 70 மி.மீ

  • தேவாலா, விண்ட் வொர்த் எஸ்டேட், பார்வூட் (நீலகிரி) - தலா 60 மி.மீ

  • சிறுவாணி அடிவாரம் (கோவை), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) - தலா 40 மி.மீ

  • வூட் பிரையர் எஸ்டேட், செருமுள்ளி, நடுவட்டம், கிளன்மார்கன் (நீலகிரி) - தலா 30 மி.மீ

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=====