முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள " தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் " தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
28ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் தாய்மாமன் சீர்மறையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிறப்பு நலத்திட்டத்தை வரும் செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
திட்டத்தின் பின்னணி, நோக்கம்
தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து நிதி உதவி, இலவசப் பிரசவம், புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு, அவசர மகப்பேறு சிகிச்சை மற்றும் PICME மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு வெற்றிகரமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அரசு மருத்துவச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், வெற்றித் தமிழகத்தின் தொலைநோக்குத் திட்டத்தின்படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காகக் கடந்த 23.06.2026 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
தங்க மோதிரம், விநியோக விவரங்கள்
தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.
மேலும் 4.20 லட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன.
அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம்
தங்க மோதிரம் எடை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும்.
ஒவ்வொரு தங்க மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண் (Unique Serial Number) மற்றும் சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகம் (Tamper-proof Packaging) வழங்கப்படும்.
1,28,000 தங்க மோதிரம் கொள்முதல்
கொள்முதல்: இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
முந்தைய தேதியில் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு
இத்திட்டம் 28.09.2026 அன்று தொடங்கப்பட்டாலும், 22.06.2026 முதல் திட்டம் தொடங்கப்படும் நாள் வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இதற்காக 107 மையங்களில் (Hubs) தினமும் 100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் தங்க மோதிரம் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திட்டம் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்க மோதிரம் நேரடியாக வழங்கப்படும்.
==================