CM Joseph Vijay Slams MK Stalin Over Karur Stampede Issue At Public Meet
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, முதன்முறையாக இன்று கரூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, கரூர் சம்பவத்தை வைத்து முன்னாள் முதல்வரும் , திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தான் தன் மீது வீண் பழிசுமத்தி அரசியல் செய்வதாக காரசாரமாகக் பேசியுள்ளார். .
"என் வாழ்நாளின் மறக்க முடியாத வலி" – கலங்கிய முதல்வர்
பொதுமக்கள் மத்தியில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய முதல்வர் விஜய், கரூர் விபத்து குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"ஒரு மனிதன் தன் வாழ்வில் எவ்வளவு பெரிய உயர்வுக்கு சென்றாலும், அவனது மனதளவில் இருக்கும் சில வலிகளையும் காயங்களையும் யாராலும் மறக்க முடியாது. எனக்கும் அப்படித்தான். என் வாழ்க்கையிலேயே அனைத்தையும் விட எனக்கு அதிகமான வலியைத் தந்தது அந்த கரூர் சம்பவம்தான்.
அன்று மக்களைச் சந்தித்து பேசுவதற்காகத்தான் நாங்கள் திருச்சி, அரியலூர் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்றிருந்தோம். பெரம்பலூர் சென்றபோது அங்கு கூட்டநெரிசல் அதிகமாக இருப்பதாக காவல்துறை எச்சரித்ததால், உடனே அந்த நிகழ்ச்சியை நாங்கள் ரத்து செய்துவிட்டோம்."
காவல்துறையின் தவறை நம்பிவிட்டேன்
தொடர்ந்து பேசிய அவர், கரூர் சம்பவத்தின் போது நேர்ந்த பாதுகாப்பு குறைபாடுகளைப் பட்டியலிட்டார்.
எச்சரிக்கத் தவறிய காவல்துறை
பெரம்பலூரைப் போல நாமக்கல்லில் கூட்டம் முடிந்தபோதே, கரூர் மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும் அல்லது கூட்டத்தை ரத்து செய்யப் பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.
பாதுகாப்பு குறைபாடு
நெடுஞ்சாலையிலிருந்து கூட்டத்தை வழிநடத்தி அழைத்து வந்த காவல்துறையினரை அன்று நான் முழுமையாக நம்பிவிட்டேன். அந்த விபத்தில் நாம் பல குழந்தைகளை இழந்தோம். நிகழ்விடத்திற்குப் போதுமான காவல்துறை பாதுகாப்பை அன்றைய அரசு வழங்கவில்லை.
"ஓடி ஒளிந்துவிட்டேன் என்கிறார்களா? வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?"
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய், "குழந்தைகளை இழந்து தவிக்கும் அந்தப் பெருவலியோடு வீட்டில் இருந்த என்னை, 'ஓடி ஒளிந்துவிட்டார்' என்று சிலர் பேசுகிறார்கள்.
வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? அன்று போதுமான பாதுகாப்பைத் தராமல், இப்போது பழியை எங்கள் மீது போட்டுவிட்டு அரசியல் செய்கிறார்கள். நான் மக்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்தேனே தவிர, எந்தவித சுய ஆதாயத்திற்காகவும் வரவில்லை" என்று ஆவேசமாகப் பேசினார்.
பணமா? ஜனமா? தொண்டர்களுக்கு அறைகூவல்
இறுதியாகத் தனது தொண்டர்களை நோக்கிக் பேசிய முதல்வர், "எதிர்க்கட்சியினரின் இத்தகைய விமர்சனங்களுக்கு நீங்கள் ஏற்கனவே நல்ல பதிலடி கொடுத்துள்ளீர்கள். ஆனால் இது மட்டும் போதாது, அவர்கள் வாழ்நாளில் இனி எப்போதும் தலைதூக்க முடியாத அளவிற்கு பலமான பதிலடியைக் கொடுக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை 'பணமா? ஜனமா?' என்று யாராவது கேள்வி கேட்டால், நான் எப்போதும் 'ஜனம்தான் முக்கியம்' என்றுதான் கூறுவேன்" என முழங்கினார்.
=====