2026 சட்டமன்ற தேர்தல் - எகிறும் எதிர்பார்ப்பு
CM MK Stalin Warns DMK Members Of Nellai : 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் வருகையால் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டு இருக்கிறது. எனவே, இதுவரை இல்லாத வகையில், 2026 சட்டமன்ற தேர்தல் ஆளும் கட்சியான திமுகவிற்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு கடும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது.
நிர்வாகிகளுடன் நேரடியாக சந்திப்பு
234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான .ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டு ஆலோசித்து வருகிறார். சென்னை அறிவாலயத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது. மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
73 தொகுதிகளில் ஆலோசனை நிறைவு
இதுவரை 33 நாட்களில் 73 சட்டமன்ற தொகுதிகளில் ஆலோசனை நடத்தி முடித்து இருக்கிறார். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, தேர்தல் வியூகம், தொகுதிகளில் கட்சியினரின் செயல்பாடுகள், தொகுதி வாரியாக தேர்தல் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்து வருகிறார்.
நெல்லை, சங்கரன் கோவில் தொகுதிகள்
அந்த வகையில், நெல்லை மற்றும் சங்கரன் கோவில் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஒன்-டூ-ஒன் சந்திக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் நெல்லை(Nellai Constituency) தொகுதியில் திமுக கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
நெல்லையில் தோற்றால் பதவிப் பறிப்பு
நெல்லை தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லையென்றால் அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆலோசனையில் தெற்கு மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்பியும் பங்கேற்றிருந்தார்.
நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
நெல்லை தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் நயினார் நாகேந்திரன். அவர் தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்து வருகிறார். எனவே நெல்லையில் பாஜகவிடம் தோற்கக் கூடாது என்ற அச்சம் காரணமாக முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை எச்சரித்தாக தெரிகிறது.
===============