CM Vijay alleged bribes ranging from 7.5% to 10% were collected from contractors under 'party funds' in DMK's tenure. google
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் "10% ‘Party Fund" : 1970களில் 40 லட்சம் லஞ்சம் : சட்டசபையில் சரமாரியாக தாக்கிய முதல்வர் விஜய்...!

திமுக ஆட்சியில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டி இருக்கிறார்.

Kannan

காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை (இ.டி) அளித்த ஆவணங்களை வாசித்தார்.

'பார்ட்டி ஃபண்ட்' 10%

'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் 10% வரை லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்கு அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரடியாகப் பலனடைந்ததாகவும் அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறிப் பேரவையில் புயலைக் கிளப்பினார்.

மக்கள் பணத்தை தொட மாட்டோம்

“மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்று கடந்த வாரம் பேசும்போது, என் டேபிளில் மூன்று துறைகள் தொடர்பான கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்பேன் என்றும் கூறியிருந்தேன்.

உடனே எதிர்க்கட்சியினர், “இப்போதே அந்தக் கோப்புகளைத் திறந்து காட்டுங்கள்” என்று சவால் விட்டார்கள்.

ஊழல் கோப்புகள் - சிறிய சாம்பிள் பார்ப்போமா?

கடந்த தி.மு.க. ஆட்சிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்கள் இருக்கின்றன. நான் மறுபடியும் சொல்கிறேன். நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்குள் நான் செல்லவில்லை. அந்த விசாரணை தொடர்பாக எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.

ஆனால், அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களில் இருக்கக்கூடிய சில தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது.

இதை முழுமையாகப் படித்தால் இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அதனால் அதன் ஹைலைட்ஸை மட்டும் படிக்கிறேன்.

முதலில் சர்க்காரியா கமிஷனில் என்ன இருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போம்.

வீராணம் திட்டம் - சர்க்காரிய கமிஷன்

1970-களில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, வீராணம் திட்டத்துக்கான குழாய்களைத் தயாரிக்கும் பணிக்காக சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்க்காரியா விசாரணை கமிஷன் விசாரணை நடத்தியது.

அந்த கமிஷனின் இறுதி அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தொகுதி ஒன்றில், ‘வீராணம் திட்டம்’ என்று ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது. சுமார் 80 பக்கங்கள் அந்த அத்தியாயத்தில் உள்ளன. 71-வது பக்கத்தில் இருந்து 150-வது பக்கம் வரைக்கும் அந்த அத்தியாயம் இடம்பெற்றிருக்கிறது.

அதில், டெண்டர் வேண்டுமென்றால் இரண்டரை சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று கலைஞரோடு தொடர்புடைய மாறன் கேட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1970ல் ரூ.40 லட்சம் கமிஷன்

அந்த டெண்டரின் மதிப்பு ரூ.16 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ரூ.16 கோடிக்கு இரண்டரை சதவீதம் என்றால் சுமார் ரூ.40 லட்சம் கமிஷன் வரும்.

இந்தக் கணக்கு நான் உருவாக்கிச் சொல்வது கிடையாது. விசாரணை கமிஷன் அறிக்கையிலேயே இருக்கிறது. 2001-ம் ஆண்டு இதே அவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பொன்னையன் இதே சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கையைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.

ஊழல் தொடர்பாக கிடைத்த தகவல்கள்

அப்போதுதான் இந்த சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற பெயரும், அவருடைய மருமகன் தொடர்பான பெயரும் வெளிவந்திருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு விஷயத்தை, 25 ஆண்டுகளுக்கு முன்னால் இதே சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்கள் என்று சொல்லி, கொஞ்சம் தோண்டிப் பார்த்தோம். அப்போதுதான் பல விஷயங்கள் வெளியில் வர ஆரம்பித்தன.

அப்படி பார்த்தால் அந்த அறிக்கைக்கு பொன்விழா ஆண்டே வந்துவிட்டது. பவளவிழாவை நோக்கியும் அது செல்கிறது. அதாவது, கட்சியின் பொன்விழா கண்ட சாதனைகளில் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் ஒன்று போலிருக்கிறது.

இது மட்டுமல்ல; முரசொலி கட்டிடம் கட்டுவதற்காகவும் பல்வேறு வகையில் பணம் கொடுத்திருக்கிறார்கள். ரொக்கமாகவும் கொடுத்திருக்கிறார்கள்; பொருட்களாகவும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

கலைஞர் மீது மதிப்பு உண்டு

கலைஞர் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. தவறாக அவருடைய பெயரை குறிப்பிட்டதற்காக மன்னிப்பும் கேட்க சொல்லியிருக்கிறேன்.

அவருடைய பெயரின் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. இவை எங்களுடைய சொந்தக் குற்றச்சாட்டுகள் அல்ல. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள்.

கருணாநிதி மீது கமிஷன் குற்றச்சாட்டு

இதில் என்னதான் நடந்திருக்கிறது என்று தொடர்ந்து படித்துக்கொண்டே போனால், அந்த அறிக்கையில் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளது தெரியுமா? சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு டெண்டர் வழங்குவதற்காக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, தன்னுடைய முதலமைச்சர் பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ‘தமிழக முதலமைச்சர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் டெண்டர் தொகையை குறைத்துப் போடச் சொல்லி, அதற்காக தலைமைப் பொறியாளராக இருந்த உசேனை கட்டாயப்படுத்தினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் நான் இப்போது பேசியிருக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ‘எங்களுடைய அரசியல் பாரம்பரியம் பற்றி தெரியுமா? எங்களுடைய அரசியல் அனுபவம் பற்றி தெரியுமா? எங்களுடைய அரசியல் சீனியாரிட்டி பற்றி தெரியுமா?’ என்று வீர வசனங்களையெல்லாம் பேசுவார்கள் அல்லவா?

உண்மையை பேசினால் திமுகவினர் ஓடிவிடுவார்கள்

அவர்களுடைய சீனியாரிட்டி என்ன? அவர்களுடைய அனுபவம் என்ன? அவர்களுடைய அரசியல் பாரம்பரியம் என்ன? என்பதை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது அல்லவா இதையெல்லாம் சொன்னால் எழுந்து ஓடினாலும் ஓடிவிடுவார்கள். அதற்கு நாம் பொறுப்பல்ல.

லைபரரியில் ஆதாரங்கள் இருக்கு

இப்போதும் சொல்கிறேன். நீங்கள் ஆதாரம் கேட்டீர்கள் என்றால், நீங்கள் பார்லிமென்ட்டுக்கெல்லாம் போக வேண்டிய அவசியமில்லை. இங்கே நம்முடைய சட்டப்பேரவைக்குள்ளேயே நூலகம் இருக்கிறது. அங்கே போய் தேடிப் பாருங்கள்.

சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் அங்கே இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தப் புத்தகம் இன்னும் அங்கே இருக்கிறது.

திமுகவினர் மிஸ்டர் க்ளீனா?

‘மிஸ்டர் க்ளீன், மிஸ்டர் க்ளீன்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள் அல்லவா? அப்போதே இப்படியென்றால், இப்போது யோசித்துப் பாருங்கள். மிஸ்டர் க்ளீனா? அடுத்து, அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள்.

தி.மு.க.வுக்கு எப்போதுமே ஒரு கணக்கு உண்டு. ஆதாரத்தைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு, மற்றவர்களிடம் போய் ஆதாரத்தைத் தேடிக்கொண்டிருப்பார்கள். அப்படித்தான் நான் பார்ட்டி ஃபண்ட் (கட்சி நிதி) என்று சொன்னபோதும் ஆதாரம் கேட்டார்கள். இப்போதும் சொல்கிறேன். ஆதாரம் பக்கத்திலேயேதான் இருக்கிறது. இந்த அமலாக்கத்துறை விஷயத்துக்கு வருவோம்.

திமுகவின் பார்ட்டி ஃபண்ட்

அமலாக்கத்துறை சில 100 பக்கங்களில் ஒரு அறிக்கையை கொடுத்தது. பார்ட்டி பண்ட் (கட்சி) நிதி வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று ஒரு டாக்குமென்ட்டை தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத்துறை கொடுத்தது. அதில் பார்ட்டி பண்ட் பற்றி சொல்லி இருக்கிறது அதில் அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயம் பற்றி எல்லாம் சொல்லி இருக்கிறது.

இந்த பிரச்னை சம்பந்தமாக நீதிமன்ற விஷயத்தில் நாம் தலையிடவில்லை, அதைப் பற்றி நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை, இவர்களுக்கு பார்ட்டி பண்ட் (கட்சி நிதி) பற்றிய ஆதாரம்தானே வேண்டும்.

பார்ட்டி ஃபண்ட் 10%

அது என்ன நான் சொல்வது, அதை என்ன இந்த விஜய் சொல்வது, அமலாக்கத் துறையை சொல்லி இருக்கிறது. அதை கொஞ்சம் பார்ப்போம். 7.5 சதவீதத்திலிருந்து 10சதவீதம் வரைக்கும் பார்ட்டி பண்ட் (கட்சி நிதி) வாங்கியதாக அந்த டாக்குமெண்டில் அமலாக்கத்துறை சொல்லி இருக்கிறது.

அதாவது ஒப்பந்தத்தில் இவ்வளவு சதவீதம் கட்சி நிதி தர வேண்டும் என்று சொல்லி வாங்கி இருக்கிறார்கள் அதையும் பார்ட்டி பண்ட் என்கிற பெயரில் லஞ்சமாக வாங்கி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறது.

பார்ட்டி ஃபண்ட் பயனாளர்கள் இவர்களே

இந்த பார்ட்டி பண்டின் நேரடி பயனாளர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரவி பிரசாத் டி.ரமேஷ், பிரபு மற்றும் பேர் குறிப்பிடப்படாத பல நபர்கள், அரசு அதிகாரிகள் லஞ்சங்களை வசூலித்திருக்கிறார்கள். இந்த ஒரு துறை மட்டுமல்ல இன்னொரு துறை இருக்கிறது.

அதில் யார் அமைச்சராக இருந்தார், முதலில் யார் அமைச்சராக இருந்தார், அதற்கு பிறகு யாரை அமைச்சராக மாற்றினார்கள் அதற்குள்ளே எல்லாம் நான் போக தேவையில்லை. அது அவர்களுடைய பிரச்னை. அந்த முறைகேடுகளை பற்றி அமலாக்கத்துறை அவ்வளவு தகவல்களை சொல்லி இருக்கிறது.

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி

அந்த துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். அதாவது அவருடைய பதவியை தவறாக பயன்படுத்தினார்.

நேர்மையற்ற நோக்கத்துடனும் குற்ற சதி திட்டத்துடனும் செயல்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய சாதனை” என்று முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார்.

===============