CM Vijay Honors Former Ministers VV Swaminathan HV Hande Centenary Birthday
தலைமைச் செயலகத்தில் நூற்றாண்டு விழா கௌரவம்
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் இன்று ( 27-11-2026 ) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர்களை கௌரவப்படுத்திய முதல்வர்
இந்த சிறப்பு நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வி.வி. சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி. ஹண்டே ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இருவருக்கும் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
அப்போது, மூத்த அரசியல் ஆளுமைகளான வி.வி. சுவாமிநாதன் மற்றும் டாக்டர் எச்.வி. ஹண்டே ஆகியோரின் கால்களில் விழுந்து முதலமைச்சர் விஜய் ஆசி பெற்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன் கடந்து வந்த பாதை
15.02.1927 அன்று பிறந்த வி.வி. சுவாமிநாதன், சிதம்பரம் நகராட்சித் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாக அறிந்து தீர்வு காணும் வகையில் 'புகார் பெட்டி' முறையை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
13 துறைகளை நிர்வகித்த சிறப்புக்குரியவர்
முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, கைத்தறி, செய்தி, சுற்றுலா மற்றும் மின்சாரம் உள்ளிட்ட 13 முக்கியத் துறைகளின் பொறுப்புகளை ஒரே நேரத்தில் வகித்து, நிர்வாக அனுபவத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் ஆவார்.
மருத்துவர், எழுத்தாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டே
28.11.1927 அன்று பிறந்த டாக்டர் எச்.வி. ஹண்டே, சிறந்த மருத்துவராகவும், அரசியல் தலைவராகவும், எழுத்தாளராகவும் விளங்கியவர்.
1942-ஆம் ஆண்டில் மாணவர் பருவத்திலேயே 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கலந்துகொண்டு நாட்டுப்பற்றினை வெளிப்படுத்திய ஹண்டே, 1950-ஆம் ஆண்டு முதல் எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவையாற்றி வருகிறார்.
சுகாதாரத் துறை சாதனைகள் மற்றும் பத்மஸ்ரீ விருது
ஐந்து முறை சட்டமன்ற மற்றும் சட்டமேலவை உறுப்பினராகவும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில் 1980 முதல் 1986-ஆம் ஆண்டு வரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அக்காலகட்டத்தில் போலியோ ஒழிப்பு, தடுப்பூசித் திட்டங்கள், தொழுநோய் கட்டுப்பாடு, தாய்-சேய நல மேம்பாடு மற்றும் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தியதற்காக மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான டாக்டர் பி.சி. ராய் விருதையும், 2026-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
மேலும், கம்பராமாயணத்தை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இலக்கிய ஆளுமையும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். கையொப்பமிட்ட 100 ரூபாய் தாள் வழங்கிய வி.வி. சுவாமிநாதன்
சட்டமன்ற ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூரும் விதமாக முதலமைச்சர் விஜய் இன்று அவ்விருவரையும் சிறப்பித்தார்.
அப்போது, வி.வி. சுவாமிநாதன் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கையொப்பமிட்ட நூறு ரூபாய் தாளைத் தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் அன்பளிப்பாக வழங்கினார்.
============