CM Vijay IAS IPS Officers Conference Chennai Law and Order Rules tndipr
தமிழ்நாடு

அரசியல் தலையீடின்றி காவல்துறை செயல்பட வேண்டும்! ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் தலையீடற்ற காவல்துறை குறித்துப் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவுகள்.

Kavitha prasanna

CM Vijay IAS IPS Officers Conference Chennai Law and Order Rules

தமிழகத்தில் தவெக அரசு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு இன்று (29-06-2026) தொடங்கியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஜூன் 29 மற்றும் ஜூன் 30 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சூழ்நிலையில், இந்த உயர்மட்ட அதிகாரிகள் மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மாநாட்டில் பங்கேற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள்

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு, நிர்வாகம், நலத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் ஈர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதற்காக ஆண்டுதோறும் இத்தகைய மாநாடு நடத்தப்படுவது வழக்கமாகும்.

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த முதல் மாநாட்டில் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர்கள் எனப் பலரும் நேரில் பங்கேற்றுள்ளனர்.

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் விதித்த அதிரடி உத்தரவுகள்

மாநாட்டின் தொடக்க நாளில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு மற்றும் அரசுத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்துதல் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

  • ஆளுங்கட்சியான தவெகவினர் உட்பட எந்தவொரு அரசியல் கட்சியினரின் தலையீடும் இன்றி, காவல்துறை முற்றிலும் சுதந்திரமாகச் செயல்பட முழு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

  • அதிகாரிகள் எவ்விதத்திலும் கட்சிக்காரர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. இந்த அரசு பொதுமக்களுக்கான அரசாக மட்டுமே செயல்பட வேண்டும்.

  • சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுத்து நிறுத்த தனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.

  • கள்ளக்குறிச்சியில் நேரிட்ட கள்ளச்சாராய உயிரிழப்புகள் போன்ற துயர சம்பவங்கள் இனி எப்போதும் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாத வண்ணம் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

  • அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் அடித்தட்டு மக்களை முழுமையாக சென்றடையும் வகையில் அதிகாரிகள் தீவிரமாக செயலாற்ற வேண்டும்.

  • போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதுடன், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்

மேற்குறிப்பிட்டவற்றை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

=====