Cm vijay is set to Host all TVK MLA Conference in panayur Google
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் இன்று TVK எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!

எம்.எல்.ஏ-க்கள் மீதான அடுத்தடுத்த புகார்கள் எதிரொலி பனையூரில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் ஒழுக்கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் குறித்து விஜய் ஆலோசிக்க உள்ளார்.

NARENDRAN K

பனையூரில் இன்று ஆலோசனைக் கூட்டம் :

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் தலைமையில் இன்று (நவம்பர் 11) அனைத்து TVK எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

துணை சபாநாயகர் விவகாரம் குறித்து ஆலோசனை:

திருச்சி மாவட்டம் துறையூரில் பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பிய கார்த்திக் குமார் என்பவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட நபர் மிரட்டப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் கட்சிக்குள் கவனத்தைப் பெற்றுள்ளது.

எம்.எல்.ஏ-க்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுமா?

அதேபோல், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதும் மாவட்ட ஆட்சியருக்கு முறையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களின் குறைகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும், கட்சியின் ஒழுக்கத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்சி நிர்வாகத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க உத்தரவா?

தொடர்ந்து சில TVK எம்.எல்.ஏ-க்கள் சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், கட்சியின் பெயருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பொதுமக்களிடம் எம்.எல்.ஏ-க்கள் நடந்துகொள்ளும் விதம், தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பது, கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.

=======================