CM Vijay Launches ‘Dream Olympics 2036’ Scheme to Boost Tamil Nadu Athletes Google
தமிழ்நாடு

தமிழக வீரர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்க ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம் : முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

18 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி ஊக்கத்தொகை.. ஒவ்வொரு வீரருக்கும் ரூ.50 லட்சம் நிதியுதவி ...

NARENDRAN K

தமிழக விளையாட்டு வீரர்கள் :

தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேசப் போட்டிகளில் சாதனை படைப்பதை ஊக்குவிக்கும் வகையில், ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 18 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.8.25 கோடி உயரிய ஊக்கத்தொகையை வழங்கி கவுரவித்தார்.

வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி ஊக்கத்தொகை:

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் முதல்வர் விஜய் தலைமை தாங்கி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதித்த வித்யா ராம்ராஜ், விஷால் டி.கே., ராஜேஷ் ரமேஷ், பரணிகா இளங்கோவன், அபிநயா ராஜராஜன், கமலினி, சமீனா ரியாஸ், வேலவன் செந்தில்குமார், ஜோஸ்னா சின்னப்பா, அபய் சிங், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்களும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த பிரக்ஞானந்தா, வைஷ்ணவி, குகேஷ், சவிதா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளும் இந்த ஊக்கத்தொகையைப் பெற்றனர். மொத்தம் 18 பேருக்கு ரூ.8.25 கோடி வழங்கப்பட்டது.

‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம் தொடக்கம்:

தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை உலக அரங்கில் கொண்டு சென்று, ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்யும் நோக்கில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் வீரர், வீராங்கனைகளுக்கு தரமான பயிற்சி, அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப ஆதரவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

46 விளையாட்டுகள் அடங்கிய ஒலிம்பிக் சிட்டி :

நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது அவசியம் என்று தெரிவித்தார்.

இதற்காக 46 விளையாட்டுகளை உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த ‘ஒலிம்பிக் சிட்டி’ மற்றும் மண்டல அளவில் 4 ஒலிம்பிக் அகாடமிகளை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

8 வயது முதலே திறமையான வீரர்களைக் கண்டறிய திட்டம் :

ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்ல நீண்டகாலப் பயிற்சி அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 8 வயது முதலே விளையாட்டுத் திறமை கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை விளையாட்டு விடுதிகளில் சேர்க்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்களின் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்துக்கு ஒரு பதக்கமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

பயிற்சியாளர்கள், விளையாட்டு சங்க நிர்வாகிகளுக்கும் பாராட்டு :

வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த பயிற்சியாளர்கள் மற்றும் தடகளம், ஸ்குவாஷ், கிரிக்கெட், பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

===============