தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
திட்டத்தின் தொடக்க விழாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு முதல்கட்டமாக தங்க மோதிரங்களை அணிவித்து திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
மேடையில் இருந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு நேரடியாக மோதிரம் அணிவித்த அவர், பின்னர் கீழே அமர்ந்திருந்த தாய்மார்களிடமும் சென்று மோதிரங்களை வழங்கினார்.
விழாவில் கலந்து கொண்ட சில தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கும் முதல்வரே மோதிரம் அணிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், குழந்தைகளை கையில் வாங்கி அவர்களுக்கும் மோதிரம் அணிவித்தார்.
இதனால் நிகழ்ச்சி அரங்கில் உற்சாகமான சூழல் நிலவியது.
நிகழ்ச்சியின் போது சில பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்ற முதல்வர் விஜய், குழந்தைகளை கையில் தூக்கி வைத்து பெயர் சூட்டினார்.
அப்போது ஒரு பெண் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட நிலையில், அவரை முதல்வர் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
திட்ட தொடக்க விழாவிற்காக மதுரை வந்த முதல்வர் விஜய்க்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், மீனாட்சி அம்மன் வேடமணிந்து நின்ற சிறுமியை கையில் தூக்கி வாழ்த்திய நிகழ்வும் கவனம் பெற்றது.
விழாவில் பேசிய அமைச்சர் அருண் ராஜ், “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் தங்கத்திற்கு தமிழக அரசே உத்தரவாதம் அளிக்கிறது.
முதல்கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
பிரசவமாகி வீடு திரும்பும் போதே தகுதியான குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
சித்திரை திருவிழாவில் தங்கைக்காக அண்ணன் சீர் சுமந்து வரும் பாரம்பரியமும், குடும்ப பாசத்தின் அடையாளமாக தாய்மாமன் உறவும் முக்கியத்துவம் பெறும் மதுரையில் இந்த திட்டத்தை தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் இந்த திட்டத்தின் தொடக்க விழா மதுரையில் நடத்தப்பட்டதாக அமைச்சர் அருண் ராஜ் கூறினார்.
===================