Communist Party Demands 12 Seats Sharing in DMK Alliance in Tamil Nadu determined to have double-digit seats for TN Assembly Election 2026 Google
தமிழ்நாடு

6 தொகுதிகள் NO, 12 தொகுதிகள்!: கம்யூனிஸ்ட் கட்சிகள் கிடுக்கிப்பிடி

Communist Party Demands 12 Seats in DMK Alliance Tamil Nadu : திமுக கூட்டணியில் இந்தமுறை இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என்பதில், கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதியுடன் இருப்பதால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Kannan

தமிழக தேர்தல் களம்

Communist Party Demands 12 Seats Sharing in DMK Alliance in Tamil Nadu : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.

கூடுதல் தொகுதி கேட்கும் காங்கிரஸ்

திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, கூடுதல் இடங்களை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. அப்படி கொடுக்கா விட்டால், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் செல்லவும் அந்தக் கட்சி தயாராக உள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள்

விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற திமுக கூட்டணி கட்சிகளும் இந்த முறை கூடுதல் இடங்களை எதிர்பார்க்கின்றன.

தொடர்ந்து தாங்கள் கூட்டணியில் இருக்கும் நிலையில், புது வரவாக ராமதாஸ், பிரேமலதா வந்தால் கூடுதல் தொகுதிகள் கொடுப்பது என்ன நியாயம் என்பது இந்தக் கட்சிகளின் கேள்வியாக உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போர்க்கொடி

இந்தநிலையில், காங்கிரசை போன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூடுதல் தொகுதிகளை கேட்பது என்பதில் உறுதியுடன் நிற்கிறது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதுபற்றி பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை (10 அல்லது 12 தொகுதிகள்) கேட்க உள்ளதாக தெரிவித்தார்.

கூடுதல் தொகுதி கேட்கும் மார்க்சிஸ்ட்

2021 தேர்தலில் மார்க்சிஸ்ட், 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை கணிசமான தொகுதிகளை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்பட்டதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே, இந்தமுறை வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அதிக தொகுதிகள் கோரப்படும் என்றார்.

இரட்டை இலக்க தொகுதிகளை கோருவது மார்க்சிஸ்ட் கட்சியின் நம்பிக்கையையும், தமிழக அரசியலில் தனது பங்கை அதிகரிக்கும் முயற்சியையும் வெளிப்படுத்துகிறது.

இரட்டை இலக்கம் - இந்திய கம்யூனிஸ்ட்

இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முறை கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது. கடந்த முறை இந்தக் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டது. எனவே, இந்த முறை இரட்டை இலக்கம் அதாவது 12 தொகுதிகள் வரை இந்திய கம்யூனிஸ்ட் எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்து இருக்கிறார்.

கூடுதல் தொகுதிகள் கேட்பது - உரிமை

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை (10 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள்) கேட்டுப் பெறுவோம்.

கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்பது கூட்டணிக்கு விரோதமானது அல்ல என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று வீரபாண்டியன் நம்பிக்கை தெரிவித்தார்.

நெருக்கடியில் திமுக

ஏற்கனவே காங்கிரஸ் ஒருபக்கம் கூடுதல் தொகுதி கேட்டு நெருக்கும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதல் இடங்களை கேட்பது, திமுகவுக்கான நெருக்கடியை அதிகரித்து இருக்கிறது.

=====================