கோவை- மதுரை மெட்ரோ நிலவரம்
MP Karthik Chidambaram on Coimbatore, Madurai Metro Rail Project : தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களாக சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரை விளங்கி வருகிறது. அதன்படி , இங்கு மக்கள் தொகையும் அதிகமாகவே காணப்படுவதால் பொது போக்குவரத்தில் கூட்ட நெரிசல்களும் தினசரி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில், இதற்கு மத்திய அரசு தவிர்த்துள்ளதாக சில வதந்திகள் பரப்பபட்டு வந்தது.
இதற்கு பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு அரசு முறையாக மெட்ரோ ரயில் கொண்டுவருவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் இதனால் மெட்ரோவிற்கான ஒப்புதல் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவின் கூட்டணி வரும் சட்ட மன்றத்தில் அமையும் நிலையில், மெட்ரோவிற்கான முறையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மெட்ரோ கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும் மெட்ரோ கொண்டு வருவது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
30 நாட்களுக்குள் திருத்த முடியுமா என்பதுதான் கேள்வி
இது குறித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஏற்கக் கூடியதே. ஆனால் வாக்காளர் நீக்கப்பட தகுந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அளிக்க வேண்டும். முப்பது நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலை திருத்த முடியுமா என்பது தான் கேள்வி.
தேர்தல் கமிஷனுக்கு, 2026ல் தமிழக சட்டசபைத்தேர்தல் வரும் என்பது தெரியும். 2025 ஜனவரியிலேயே சிறப்பு தீவிர திருத்தப் பணியை துவக்கியிருக்கலாம். திருத்தப் பணிக்கான ஊழியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை. ஓட்டுச்சாவடி அலுவலர்களால் வாக்காளர்களின் சந்தேகங்களை தீர்க்க முடியவில்லை. வாக்காளர் திருத்தம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை என்று கூறினார்.
மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்ற நகர்களுக்கு தேவையில்லை
மேலும், பீஹார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தமிழர்கள் பீகாரிகளை அடிக்கிறார்கள் என்றும் தமிழகத்தில் தேர்தல் வந்தால் 'தமிழ் கற்றுக் கொள்ளவில்லையே' என அங்கலாய்க்கிறார். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவருக்கு பிடித்த உணவு கேரளா, தமிழ்நாடு, அஸ்ஸாம், பெங்கால், புதுச்சேரி சாப்பாடு தான்.
அந்த மாநிலங்களின் நடனம், கலாசாரம், மொழிதான் அவருக்கு பிடிக்கும். அந்த ஆடைகள் தான் அவருக்கு பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை, சென்னையைத் தவிர தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்ற நகர்களுக்கு தேவையில்லை. இந்தூர், ஆக்ரா போன்றவற்றில் போடப்பட்ட மெட்ரோ திட்டங்களும் வீணாகி விட்டது. தமிழகத்தில் எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும், தி.மு.க., தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். இவ்வாறு கார்த்தி கூறினார்.