Congress MP Praveen Chakravarthy said, MLAs moving to another party is not 'horse-trading,' but 'horse racing.' google
தமிழ்நாடு

"Horse trading - Horse racing" : எம்எல்ஏக்கள் வேறு கட்சிகளுக்கு செல்லும் விவகாரம் : பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம்...!

எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு செல்வது குதிரை பேரம் அல்ல, அது குதிரை பந்தயம் என்று காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவரத்தி புதிய விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Kannan

தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, எம்எல்ஏக்கள் ஆன 6 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்து இருக்கிறார்கள்.

குதிரை பேரம் - விமர்சனம்

இதை குதிரை பேரம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், அவர்களாகவே விருப்பப்பட்டு வருவதாக தவெக தெரிவித்து வருகிறது. தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும் இதே கருத்தை முன்வைத்து இருக்கிறது.

குதிரை பேரம் அல்ல குதிரை பந்தயம்

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் ராஜயசபா எம்பி பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். பணம் கொடுத்து வாங்குவதுதான் குதிரை பேரம், இதர கட்சி எம்.எல்.ஏக்கள் சுயமாக வேறு கட்சிக்கு செல்வது குதிரை பந்தயம் என்று கூறினார்.

அதிமுகவிற்கு பதிலடி

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்தை அதிமுக நாடி இருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”எந்த அடிப்படையில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது. குதிரை பேரம் என்பது ஒருவரிடம் பணம் கொடுத்து வாங்குவதுதான். இங்கு எம்.எல்.ஏ-க்கள் சுயமாக முடிவெடுத்து வேறு கட்சிக்கு செல்கின்றனர்.

திமுக குதிரை பேரம்

சட்டப் பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தவெகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என திமுகவை சேர்ந்தவர்கள்தான் தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு போடப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது தவெக மற்றும் அதிமுக இடையே நடைபெறும் விஷயம். ஏதாவது தவறு நடந்தால், அப்பொழுது நாங்கள் பேசுவோம். இப்போது அதை குறித்து நாங்கள் பேசுவது சரியாக இருக்காது”.

கனிமொழி கருத்துக்கு பதில்

தவெக வாஷிங் மெஷின் என எம்.பி கனிமொழி விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “யார் என்ன சொல்கிறார்கள் என்பதை எல்லாம் பார்த்து பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. தி.மு.க எதிர்க்கட்சியில் உட்கார வேண்டும் என்பதுதான் மக்களின் தீர்ப்பு.

திமுகவிற்கு எதற்கு பயம்?

எதிர்க்கட்சியின் அமர என்ன பயம், எதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என பயம், திமுக - அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி ஏன் ஆட்சியைப் பிடிக்க பதற்றப்படுகின்றனர்” என்ற தொடர் கேள்விகளை பிரவீன் சக்கரவர்த்தி முன்வைத்தார்.

==============================