தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி
தமிழகத்தில் முதல் தேர்தல் தொடங்கி 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அண்ணாதுரை தலைமையில் திமுக 1967 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தது.
திராவிட கட்சிகளின் ஆட்சி
அதன்பிறகு, ஆட்சியை பிடிக்கும் எண்ணம் ஒருமுறை கூட காங்கிரசுக்கு கைக்கூடி வரவில்லை. திமுக, அதிமுக மாறிமாறி ஆட்சி பொறுப்பை வகித்தன.
அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் என திராவிட தலைவர்களே 59 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டனர்.
மைனாரிட்டி திமுக அரசு
2006 தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெறாமல், மைனாரிட்டி அரசு என்று அழைக்கப்பட்டாலும், வெளியில் இருந்து 5 ஆண்டுகளும் காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. ஆனாலும், ஆட்சியில் பங்கு பெறவில்லை. பாமகவும் வெளியிருந்துதான் ஆதரவு கொடுத்தது.
காங்கிரசின் கனவு
தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நெடுநாள் கனவு. காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையை, காங்கிரஸ் தலைவர்கள் எப்போதும் வெளிப்படுத்தி வருவார்கள்.
வழிவிடாத திராவிட கட்சிகள்
ஆனால், திமுக, அதிமுகவும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால், காங்கிரசின் கனவு நிறைவேற வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.
தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு
ஆட்சி அமைக்க 118 இடங்களை தேவைப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முன்பே, தவெகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டிய காங்கிரஸ், இந்த முறை அந்த வாய்ப்பை விடாமல், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனது ஆதரவை தெரிவித்தது.
தவெகவிற்கு இடதுசாரிகள், விசிக ஆதரவு
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரின் ஆதரவால், தவெக பலம் 113 ஆக, இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்ல் ஆதரவு கிடைத்ததால், 120 ஆக உயர்ந்தது.
தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவில் ஒரு பிரிவினர் அதாவது 25 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்ததால், 144 வாக்குகள் பெற்று முதல்வர் விஜய் அரசு வெற்றி பெற்றது.
நனவான காங்கிரஸ் கனவு
இந்தநிலையில் தான் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்ற காங்கிரசின் கனவு நனவாக இருக்கிறது. தவெக அமைச்சரவையில காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகி விட்டது.
ராகுலுடன் எம்எல்ஏக்கள் சந்திப்பு
டெல்லி சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும், கிரிஷ் சோடங்கரோடு சேர்ந்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்கள்.
எத்தனை அமைச்சர்கள், விரைவில் முடிவு
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரீஷ் சோடாங்கர் ''தவெக அமைச்சரவையில் இடம்பெற காங்கிரசுக்கு அழைப்பு வந்துள்ளது. கட்சியை பலப்படுத்த இதுவே சரியான நேரம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எத்தனை அமைச்சர்கள் காங்கிரஸ் சார்பில் இடம்பெற உள்ளனர் என ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசி இதுகுறித்து ராகுல்காந்தி முடிவெடுப்பார்'' என்று தெரிவித்தார்.
அநேகமாக 2 அமைச்சர்கள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
------.