Congress split into two in 1996 to oppose ADMK and form TMC, ta similar situation will arise again in 2026 google
தமிழ்நாடு

”1996ல் அதிமுக... 2026ல் திமுக...?” : இன்னொரு பிளவுக்கு ரெடியாகிறதா தமிழக காங்கிரஸ்!

1996ல் அதிமுக எதிர்ப்புக்காக காங்கிரஸ் இரண்டாக உடைந்து தமிழ் மாநில காங்கிரஸ் உருவான நிலையில், 2026ல் மீண்டும் அத்தகையை சூழல் ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Kannan

பாரம்பரியம் மிக்க அகில இந்திய காங்கிரஸ், பல்வேறு மாநிலங்களில் பிளவுபட்டு மாநிலக் கட்சிகளாக உருவெடுத்து ஆட்சி, அதிகாரத்திலும் இருந்து வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ்

உதாரணமாக மேற்கு வங்கத்தில் திரிணாமூல், ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி பிளவுபடுமோ என்ற நிலை உருவாகி இருக்கிறது.

தமிழ் மாநில காங்கிரஸ்

இதற்கு முன்பு இதேபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டது. 1996ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுகவிற்கு எதிரான அலை இருந்தது. ஆனால், இதை காங்கிரஸ் தலைமை உணர மறுத்ததால், ஜி.கே. மூப்பனார் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.

கரை சேர்ந்த தமாகா

தொண்டர்களின் மனநிலையை ஏற்க தலைமை முன்வாராத காரணமே இந்த பிளவுக்கு காரணம். 1996 தேர்தலில் திமுக கூட்டணியில் ரஜினியின் ஆதரவோடு 40 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா 39 இடங்களை வென்றது.

கரைந்து போன காங்கிரஸ்

அதிமுக கூட்டணியில் 60 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸால் ஒரு இடத்தில் கூட வெற்றிக் கனியை பறிக்க முடியவில்லை. அப்போது நடந்த மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட 20 தொகுதிகளையும் வென்று சாதித்து காட்டினார் ஜி.கே. மூப்பனார்.

2026ல் தொண்டர்கள் மனநிலை

30 ஆண்டுகள் கழித்து 2026ல் அதேபோன்ற இக்கட்டான சூழ்நிலை சந்திக்கிறது அகில இந்திய காங்கிரஸ். தேர்தல் பேச்சு தொடங்குவதற்கு முன்னதாக சுமுகமாக இருந்த காங்கிரஸ் - திமுக உறவு, இப்போது முட்டி மோதிக் கொண்டு நிற்கிறது.

கொளுத்திப் போட்ட காங்கிரஸ்

விஜய் வருகையால் தெம்புடன் இருக்கும் காங்கிரஸ் அதிக தொகுதிகள், அதிகாரத்தில் பங்கு போர்க்கொடி தூக்கி இருக்கிறது. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் கொளுத்திப் போட்ட இந்த வெடி, கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி ஒட்டு மொத்தமாக பற்றி எரியத் தொடங்கி விட்டது.

தவெக கூட்டணி - தொண்டர்கள் ஆசை

வெற்றி - தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் தவெகவுடன் கூட்டணி வைத்தால் தமிழகம் முழுவதும் சுமார் 70 தொகுதிகளில் கை சின்னம் களத்தில் நிற்கலாம்.

கட்சிக்கும் ஒரு மரியாதை கிடைக்கும் என்ற கருத்தை தொண்டர்களின் மனதில் ஆழமாக விதைத்து விட்டார்கள் திமுக எதிர்ப்பாளர்கள்.

60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லை, இந்தமுறையும் கொடுப்பதை வாங்கிக் கொண்டு அடிமை போல இருக்க வேண்டுமா?

தவெகவுடன் சேர்ந்த கௌரவமான வெற்றியை பெற்று கட்சியை வளர்ப்பது சிறந்ததா? என்று காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசப்படுகின்றனர்.

காங்கிரசில் திமுக விசுவாசிகள்

அதேசமயம், விஜயின் உண்மையான பலம் என்ன என்பது தெரியாத நிலையில், திமுக உடனான நெடிய அரசியல் பயணத்தை தொடர ப.சிதம்பரம், செல்வப் பெருந்தகை போன்றோர் ஆசைப்படுகிறார்கள்.

அதாவது எந்த ரிஸ்க் எடுக்கவும் இவர்களை போன்றோர் தயாராக இல்லை.

தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களாக இருக்கும் பலரும், திமுக கூட்டணியில் நீடிப்பதையே விரும்புகிறார்கள்.

காரணம் அப்போது தான் மீண்டும் வெற்றியை பெற முடியும் என்பது அவர்களின் தீர்க்கமான எண்ணம்.

திமுக கையில் முடிவு

23ம் தேதி திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி விடும். காங்கிரசின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக திமுக பிடிவாதம் காட்டினால், 1996ல் ஏற்பட்டது போல் இன்னொரு பிளவும் தமிழக காங்கிரசில் அரங்கேறலாம்.

1996ல் தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. அதன் காரணமாக தமாகா பெரிய வெற்றியை ஈட்ட முடிந்தது.

ஆனால், இந்த முறை பிளவு என்பது ஏற்பட்டதால், பதவிகளை தக்க வைக்கத் துடிக்கும் தலைவர்களே அதற்கு காரணமாக இருப்பர்.

காங்கிரஸ் தலைமையில் மாற்றம்

விஜயுடன் தான் கூட்டணி என டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்படலாம். அந்த இடம் மாணிக்கம் தாகூர் போன்றோர் கைக்கு வரலாம்.

எனவே, அடுத்த இரண்டு வாரங்கள் திமுக கூட்டணியில் பொருத்தவரை அக்னிபரீட்சை தான். எடுக்க இருக்கும் ஒவ்வொரு முடிவும், வெற்றி, தோல்வியை தலைகீழாக மாற்றி அமைக்கலாம்.

=========================