சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பேறு கால சிசு உயிரிழப்பு 2021-22-ம் ஆண்டு 1,000 பிரசவங்களுக்கு 10.2 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 7.7 ஆக குறைந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை பூஜ்ஜிய அளவுக்கு கொண்டு செல்ல பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.
கடந்த ஒரு மாதமாக நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இருந்து 19 மாதிரிகளை புனே வைராலஜி ஆய்வகத்துக்கு பரிசோதகைக்கு அனுப்பி வைத்தோம்.அது ஒமைக்ரான் வகை என்று கண்டறியப்பட்டது. அது வீரியமற்றது. பெரிய அளவில் உயிர் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று அறிவியல் ரீதியாக தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மூன்று நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால், இதுபோன்ற வீரியமற்ற கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது என்று அவர் கூறினார்.
மேலும் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.