மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள்
தமிழக சட்டசபை தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவியது. குறிப்பாக திமுக, அதிமுக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் 4 கோடியே 88 லட்சம் பேர் வாக்களித்து, தமிழக தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்தனர்.
அதிக வாக்குகள் பதிவு
85.15 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள். அடுத்து யார் என்ற குழப்பத்தை அதிகரிக்க செய்து விட்டன.
திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என சில கணிப்புகளும், அதிமுக தான், இல்லை தவெக ஆட்சி தான் என வேறு சில கணிப்புகளும் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன.
மே 4ல் - அரியணை யாருக்கு?
எனவே, மே 4ம் தேதி என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது. கருத்து கணிப்புகளின் படி, ஒன்று திமுக அல்லது அதிமுக அல்லது தவெகவிற்கு பெரும்பான்மை கிடைத்து விட்டால் பிரச்னை இல்லை.
திமுக கூட்டணி
திமுகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கா விட்டால், கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சேர்ந்து தான் ஆட்சி அமைக்க வேண்டி இருக்கும். இதை காங்கிரஸ் ஏற்கனவே, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை சூசகமாக தெரிவித்து விட்டது.
அதிமுக கூட்டணி
அதிமுகவை பொருத்தவரை தனிப் பெரும்பான்மை கிடைக்கா விட்டால், கூட்டணியில் இருக்கும் பாஜக, பாமக, அமமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம். அல்லது அந்தக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம்
தவெகவிற்கு 117 என்ற மேஜிக் நம்பர் கிடைக்கா விட்டால், யாருடன் கூட்டணி என்பதில் சிக்கல் இருக்கிறது.
தொங்கு சட்டசபை அமைந்தால்...
ஒருவேளை யாருக்கும் தனிப்பெரும்பானை கிடைக்காமல், தொங்கு சட்டசபை அமைந்தால், மே 5 முதல் சிக்கல் தொடங்கும்.
இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம். அந்த சூழ்நிலையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணைந்து ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளது.
கவர்னர் ஆட்சிக்கும் வாய்ப்பு?
யாருக்கும் தனிப்பெரும்பான்மை இன்றி, எந்தக் கட்சியும் ஒத்துவராத பட்சத்தில், ஆளுநர் ஆட்சியை நோக்கி நகர வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்படும். அப்படி நடக்கும் பட்சத்தில், அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் மீண்டும் சட்டசபைத் தேர்தல் நடைபெறலாம்.
மே. 4 காத்திருக்கும் ட்விஸ்ட்
எனவே, மே 4ம் தேதியை விட, 5ம் தேதி தான் தமிழகத்திற்கு உண்மையான சவால் இருக்கிறது. என்ன நடக்க போகிறது, யாரை அரியணை ஏற்ற மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு எல்லாம் இன்னும் 40 மணி நேரத்தில் காத்திருக்கிறது விடை.
=====