Chennai high court on ponmudi's controversy speech https://x.com/KPonmudiMLA
தமிழ்நாடு

‘மைக்' முன் பேசினால் மன்னரா? பொன்முடி வழக்கில் நீதிமன்றம் கருத்து

Ponmudi Controversy Case : ‘மைக்' முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

MTM

Ponmudi Controversy Speech Case Update : சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அவர்களின் இதுபோன்ற பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை(Sanatana Dharmam) பின்பற்ற வேண்டும். ஒருவர் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாடு அனைத்து குடிமக்களுக்குமானது. சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமானது அல்ல என்றார்.

மேலும், வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறும் நிலையில், ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது என்று கூறிய நீதிபதி, மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.