டிட்வா புயல்
Cyclone Ditwah Update in Tamil : வங்கக்கடலில் நேற்று வருவான டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே சுமார் 540 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. நேற்று மணிக்கு 10 கி.மீ. ஆக இருந்த புயலின் வேகம் இப்போது, மணிக்கு 7 கிலோ மீட்டர் என்ற அளவில் குறைந்து இருக்கிறது.
30ம் தேதி சென்னையை நெருங்கும்
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “ சென்னைக்கு 540 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதே வேகத்தில் நகர்ந்தால் நாளை மறுதினம் ( ஞாயிற்றுக்கிழமை ) டிட்வா புயல் சென்னையை நெருங்கி வர வாய்ப்புள்ளது.
ஆந்திராவில் கரையை கடக்கும்?
அதேசமயம், சென்னை அருகே கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.சென்னையில் இருந்து விலகி ஆந்திரா நோக்கி புயல் பயணிக்க வாய்ப்புள்ளது.
ரெட் அலெர்ட், மஞ்சள் அலெர்ட்
டிட்வா புயல் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
துறைமுகத்திற்கு வெகு துாரத்தில் புயல் உருவாகி மோசமான வானிலை நிலவுவதை அறிவிக்கும் பொருட்டு காரைக்கால் துறைமுகத்தில் 4ம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி மற்றும் கடலுார் துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிப்பை சந்திக்கும் வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
=============